சென்னையில் 15 மண்டல குழு தலைவர் பதவியையும் தி.மு.க. கைப்பற்றியது

சென்னை மாநகராட்சி 15 மண்டல குழு தலைவர் பதவி இடங்களுக்கான மறைமுக தேர்தலில் அனைத்து இடங்களையும் தி.மு.க. கைப்பற்றியது.
சென்னையில் 15 மண்டல குழு தலைவர் பதவியையும் தி.மு.க. கைப்பற்றியது
Published on

மறைமுக தேர்தல்

200 வார்டுகளை உள்ளடக்கிய பெருநகர சென்னை மாநகராட்சியில் திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்ப்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையார், பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய 15 மண்டலங்கள் உள்ளன. மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் மூலம் மண்டல குழு தலைவர் பதவியிடங்கள் நிரப்பப்படும். அந்த வகையில் 15 மண்டலங்களுக்கும் தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, நேற்று நடைபெற்றது. 15 மண்டலங்களுக்கும் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் மாநகராட்சி ரிப்பன் மாளிகை மன்ற கூட்ட அரங்கில் காலை 9.35 மணிக்கு தேர்தல் தொடங்கியது. ஓட்டுப்பெட்டிகள் தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்தன. மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாநகராட்சி கமிஷனருமான ககன்தீப் சிங் பேடி தேர்தலை நடத்தினார்.

மண்டல குழு தலைவர்கள் யார்?

மண்டலவாரியாக தி.மு.க. வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவை கமிஷனரிடம் தாக்கல் செய்தனர். பெருங்குடி தவிர்த்து மற்ற 14 மண்டலங்களிலும் வேறு யாரும் போட்டியிட மனு அளிக்கவில்லை. இதையடுத்து இந்த 14 மண்டல குழு தலைவர்களாக தி.மு.க.அறிவித்த வேட்பாளர்கள் திருவொற்றியூர்- தி.மு.தனியரசு (10-வது வார்டு), மணலி-ஏ.வி.ஆறுமுகம் (20-வது வார்டு), மாதவரம்-எஸ்.நந்தகோபால் (25-வது வார்டு), தண்டையார்பேட்டை-நேதாஜி யு.கணேசன் (38-வது வார்டு), ராயபுரம்-ஸ்ரீராமுலு (54-வது வார்டு), திரு.வி.க.நகர்- சரிதா மகேஷ்குமார் (69-வது வார்டு), அம்பத்தூர்- பி.கே.மூர்த்தி (80-வது வார்டு), அண்ணாநகர்- கூபி ஜெயின் (94-வது வார்டு), தேனாம்பேட்டை- எஸ்.மதன்மோகன் (114-வது வார்டு), கோடம்பாக்கம்- எம்.கிருஷ்ணமூர்த்தி (142-வது வார்டு), வளசரவாக்கம்- நொளம்பூர் ராஜன் (143-வது வார்டு), ஆலந்தூர்-என்.சந்திரன் (166-வது வார்டு), அடையார்-ஆர்.துரைராஜ் (172-வது வார்டு), பெருங்குடி-எஸ்.வி.ரவிச்சந்திரன் (184-வது வார்டு), சோழிங்கநல்லூர்-வி.இ.மதியழகன் (192-வது வார்டு) ஆகியோர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பெருங்குடி மண்டலத்துக்கு தேர்தல்

11 வார்டுகளை உள்ளடக்கிய பெருங்குடி மண்டல குழு தலைவர் பதவிக்கு 184-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் என்.ரவிச்சந்திரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 182-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலரான முன்னாள் எம்.எல்.ஏ.கே.பி.கந்தனின் மகன் கே.பி.கே.சதீஷ்குமார் போட்டியிட வேட்பு மனுவைத்தாக்கல் செய்தார். இதையடுத்து பெருங்குடி மண்டல குழு தலைவர் யார்? என்பதை தேர்வு செய்ய ஓட்டுப்பதிவு நடைமுறை பின்பற்றப்பட்டது. அதன்படி வேட்பாளர்கள் 2 பேர் உள்பட 11 கவுன்சிலர்கள் வாக்களித்தனர். காலை 10.50 மணிக்கு தொடங்கிய தேர்தல் காலை 11.10 மணியளவில் முடிவடைந்தது.

வாக்குப்பதிவு முடிந்த நிலையில் அ.தி.மு.க. கவுன்சிலர் கே.பி.கே.சதீஷ்குமார், யாருக்கு வாக்களித்தோம் என்பது வெளியே தெரியக்கூடாது என்பதற்காகவே மறைமுகத் தேர்தல் நடத்தப்படுகிறது. ஆனால் தி.மு.க. உறுப்பினர்கள் தங்களது வாக்குச்சீட்டை செல்போனில் படம் பிடித்துள்ளனர். எனவே மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று கமிஷனர் ககன் தீப் பேடியிடம் கோரிக்கை மனு அளித்தார்.

மறு வாக்குப்பதிவு

அதன்பின்னர், கமிஷனர் ககன் தீப் சிங் பேடி அறிவிப்பை வெளியிட்டு பேசும்போது, மாநில தேர்தல் ஆணையத்தின் 108-வது விதியின்படி வாக்குப்பதிவு செய்யும் இடத்தில் செல்போனை எடுத்துக் கொள்ள கூடாது என்று தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இந்த மண்டல குழு தலைவர் பதவிக்கு மறுத் தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தார். இதற்கு தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை கமிஷனர் ககன் தீப் சிங் பேடி சமாதானம் செய்து வைத்து, மறுவாக்குப்பதிவு நடைமுறைகளை தொடர்ந்தார். அதன்படி ஏற்கனவே பதிவான வாக்குகள் வெளியே எடுக்கப்பட்டு தனி கவரில் சீல் வைக்கப்பட்டு தனியாக வைக்கப்பட்டது. பின்னர் மறுவாக்குப்பதிவு தொடங்கியது.

தி.மு.க. கவுன்சிலர் வெற்றி

மறுவாக்குப்பதிவு காலை 11.30 மணிக்கு தொடங்கி 11.45 மணிக்கு முடிந்தது. அதன் பின்னர் வேட்பாளர்கள் முன்னிலையில் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் 8 வாக்குகளுடன் (தி.மு.க. உறுப்பினர்கள் எண்ணிக்கை) என்.ரவிச்சந்திரன் வெற்றி பெற்றார். அ.தி.மு.க. வேட்பாளர் கே.பி.கே.சதீஷ்குமார் 3 வாக்குகள் (அ.தி.மு.க. உறுப்பினர்கள் எண்ணிக்கை) பெற்று தோல்வி அடைந்தார். இதையடுத்து என்.ரவிச்சந்திரன், பெருங்குடி மண்டல குழு தலைவர் பதவிக்கு தேர்வானார்.

அவருக்கு விருகம்பாக்கம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.பிரபாகரராஜா மாநகராட்சி அலுவலகம் வந்து வாழ்த்து தெரிவித்தார். மண்டல குழு தலைவர் பதவி இடங்களுக்கு தேர்வானவர்களுக்கு அதற்குரிய சான்றிதழை கமிஷனர் ககன் தீப் சிங் பேடி வழங்கினார்.

கேள்வியால் சிரிப்பலை

இந்த நிலையில், தேர்தலுக்கு முன்னதாக மறைமுகத் தேர்தல் நடைமுறைகள் குறித்து கமிஷனர் ககன் தீப் பேடி விளக்கி கொண்டிருந்தார். அப்போது தி.மு.க. வேட்பாளர் ரவிச்சந்திரன் வேகமாக எழுந்து, வாக்களித்த பின்னர் யாருக்கு வாக்களித்தோம் என்பதை வெளியே காட்டலாமா? என்று அப்பாவியாக கேட்டார். உடனே கமிஷனர், அப்படியெல்லாம் காட்டக்கூடாது என்று கூறினார்.

மறைமுக தேர்தலின் நோக்கமே யாருக்கு வாக்களித்தோம் என்பது வெளியே தெரியக்கூடாது என்பதற்காகத்தான் ஆகும். எனவே தி.மு.க. வேட்பாளர் ரவிச்சந்திரன் எழுப்பிய கேள்வி, கூட்ட அரங்கில் சிறிது நேரம் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

மாநகராட்சி மறைமுகத் தேர்தல் துளிகள்...

* மறைமுக தேர்தலையொட்டி மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நுழைவுவாயிலில் தி.மு.க. நிர்வாகிகள் சிலருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.

* பெருநகர சென்னை மாநகராட்சி முதலாவது மண்டலமான திருவொற்றியூருக்கு முதலில் தேர்தல் நடைமுறைகள் தொடங்கின. ஆனால், வேட்பாளர் வராததால் மணலி, மாதவரம் மண்டல குழு தலைவர் தேர்வு செய்ததற்கு பின்னர், 3-வதாக திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் தேர்வு நடைபெற்றது.

* சென்னை மாநகராட்சியில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 15 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில் தேர்தல் நடைபெற்ற பெருங்குடி மண்டலத்துக்குட்பட்ட அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 3 பேர் மட்டுமே பங்கேற்றனர். காங்கிரஸ், ம.தி.மு.க. உறுப்பினர்கள் முழுமையாக கலந்துகொண்டனர். விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டு உறுப்பினர்களில் ஒரு சிலர் பங்கேற்கவில்லை.

* சென்னை மாநகராட்சி 118-வது வார்டு தி.மு.க. உறுப்பினர் மல்லிகா நேற்று காலை கோவிலுக்கு சென்றபோது தவறி கீழே விழுந்ததாக தெரிகிறது. இந்நிலையில் அவர், 3 சக்கர நாற்காலியில் அமர்ந்து வந்து கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

கவுன்சிலர்கள் செல்போன்களை வாங்கிய மாநகராட்சி கமிஷனர்

பெருங்குடி மண்டல குழு தலைவர் பதவி இடத்துக்கு வாக்குப்பதிவு முடிந்த நிலையில், செல்போன் சர்ச்சையால் மறுவாக்குப்பதிவு நடந்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்நிலையில், மறுவாக்குப்பதிவு கோரிய அ.தி.மு.க. வேட்பாளர் கே.பி.கே.சதீஷ்குமார், செல்போனில் யாரிடமோ மும்முரமாக பேசிக் கொண்டிருந்தார். இதனை கவனித்த தி.மு.க. வேட்பாளர் ரவிச்சந்திரன், கமிஷனரிடம் முறையிட்டார். மறுவாக்கு தொடங்க இருந்த நேரத்தில், மீண்டும் செல்போன் விவகாரம் பிரச்சினையை ஏற்படுத்தியது.

இதையடுத்து கூட்ட அரங்கில் மறு வாக்களிக்க தயாராக இருந்த 11 கவுன்சிலர்களிடமும் இருந்து செல்போனை வாங்குங்கள் என்று மன்ற செயலாளருக்கு கமிஷனர் ககன் தீப் சிங் பேடி உத்தரவிட்டார். மேலும் கவுன்சிலர்களிடமும், தங்கள் செல்போனை ஒப்படையுங்கள் என்று கேட்டுக்கொண்டார். இதையடுத்து மன்ற செயலாளர் மற்றும் அதிகாரிகள் கவுன்சிலர்கள் இருக்கைக்கே சென்று அவர்களது செல்போனை வாங்கி வைத்துக் கொண்டனர். தேர்தல் முடிந்ததும் செல்போனை திரும்ப ஒப்படைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com