ஈரோடு கருங்கல்பாளையம் சந்தையில் ரூ.36 ஆயிரத்துக்கு எருமை மாடு விற்பனை

ஈரோடு கருங்கல்பாளையம் சந்தையில் எருமை மாடு ஒன்று ரூ.36 ஆயிரத்துக்கு நேற்று விற்பனையானது.
ஈரோடு கருங்கல்பாளையம் சந்தையில் ரூ.36 ஆயிரத்துக்கு எருமை மாடு விற்பனை
Published on

ஈரோடு,

ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள மாட்டுச்சந்தை வாரந்தோறும் புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் நடந்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் நடந்த சந்தைக்கு, 250 வளர்ப்பு கன்று குட்டிகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இவைகள் ரூ.1,000 முதல் ரூ.8 ஆயிரம் வரை விற்பனையானது. இதை பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் வாங்கிச்சென்றனர்.

நேற்று வழக்கமான சந்தை நடந்தது. இதற்கு கோவை, கரூர், தேனி, சேலம், நாமக்கல், திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய பகுதிகளில் இருந்து மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருந்தன.

300 பசு மாடுகள், 250 எருமை மாடுகள் என மொத்தம் 550 மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு இருந்தன. இதில் எருமை மாடு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.18 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.36 ஆயிரத்துக்கும் விற்பனையானது. பசு மாடு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.16 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.32 ஆயிரத்துக்கும் விற்பனையானது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும், கேரளா, ஆந்திரா, கோவா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த ஏராளமான வியாபாரிகள் இங்கு வந்து மாடுகளை விலைபேசி பிடித்து வேன் மற்றும் லாரிகளில் ஏற்றிச்சென்றனர்.

இதுகுறித்து சந்தை மேலாளர் முருகன் கூறும்போது, கருங்கல்பாளையம் சந்தைக்கு 550 மாடுகள் விற்பனைக்கு வந்தது. இதில் 95 சதவீத மாடுகள் விற்பனையானது. பனிப்பொழிவு காரணமாக மராட்டிய மாநிலத்தில் இருந்து மட்டும் வியாபாரிகள் வரவில்லை என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com