காரைக்குடி அருகே பஞ்சாலையில் தீவிபத்து; ரூ.3 லட்சம் பஞ்சுகள் சேதம்

காரைக்குடி அருகே பஞ்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள பஞ்சுகள் எரிந்து நாசமானது.
காரைக்குடி அருகே பஞ்சாலையில் தீவிபத்து; ரூ.3 லட்சம் பஞ்சுகள் சேதம்
Published on

காரைக்குடி,

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள செட்டிநாட்டில் தனியார் பஞ்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த பஞ்சாலையில் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். நேற்றும் வழக்கம்போல் பஞ்சாலையில் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். பஞ்சாலையின் ஒரு பிரிவில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக அருகில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் அந்த தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ மேலும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதுகுறித்து உடனடியாக காரைக்குடி தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீ மேலும் பரவாமல், போராடி அணைத்தனர்.

பஞ்சாலையில் எந்திரம் இயங்கி கொண்டிருந்தபோது, பஞ்சுகளோடு கலந்து வந்த சிறு உலோக தகடுகள் எந்திரத்துடன் உரசியதால் தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தீவிபத்தில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள பஞ்சுகள் எரிந்து நாசமானது. அதிர்ஷ்டவசமாக தீவிபத்தின்போது தொழிலாளர்கள் அனைவரும் சுதாரித்து கொண்டு, பஞ்சாலையைவிட்டு வெளியே வந்தனர். இதனால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

இந்த தீவிபத்து குறித்து பள்ளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com