கோவையில் பட்டாசு வெடித்ததில் 3 கடைகள் எரிந்து நாசம்

கோவையில் பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 3 கடைகள் எரிந்து நாசமானது. இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்தன.
கோவையில் பட்டாசு வெடித்ததில் 3 கடைகள் எரிந்து நாசம்
Published on

கோவை திருச்சி ரோட்டில் உள்ள டிபார்ட்மெண்டல் ஸ்டோர் எதிரே ராஜேஸ்வரி என்பவருக்கு சொந்தமான கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் கோவை ரத்தினபுரியை சேர்ந்த சங்கர்(வயது 37) என்பவர் ஹரியானா ஹேண்ட்லூம் என்ற துணிக்கடையும், செல்வபுரத்தை சேர்ந்த சிவராமன்(33) என்பவர் கார் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையும், மதுரையை சேர்ந்த சுந்தர் என்பவர் டயர் கடையும் நடத்தி வந்தனர்.

கட்டிட உரிமையாளர் ராஜேஸ்வரியின் மருமகன் புகழேந்தி என்பவர் துணிக்கடையின் பின்புறம் தீபாவளி பண்டிகை தோறும் பட்டாசு விற்பனை செய்வது வழக்கம். விற்றது போக மீதம் உள்ள பட்டாசுகளை துணிக்கடையின் ஒரு பகுதியில் வைத்திருந்தார்.

நேற்று காலை 9 மணியளவில் துணிக்கடையில் இருந்து பயங்கர வெடி சத்தம் கேட்டது. பின்னர் தீப்பிடித்தது. துணிகளில் பற்றிய தீ மள,மளவென பரவி அருகில் இருந்த கார் உதிரிபாக விற்பனை கடை மற்றும் டயர் கடையிலும் தீப்பற்றி எரியத்தொடங்கியது.

தீவிபத்து பற்றிய தகவல் அறிந்ததும், கோவை கோட்ட தீயணைப்பு அதிகாரி சந்திரன், உதவி கோட்ட அதிகாரி குமரேசன், நிலைய அதிகாரிகள் அண்ணாதுரை, தவ்லத்முகமது, ராமச்சந்திரன், செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் 5 வண்டிகளில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று தீயை போராடி அணைத்தனர். கொழுந்துவிட்டு எரிந்த தீயில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம் அடைந்தன. சம்பவ இடத்துக்கு போலீஸ் உதவி கமிஷனர் ரமேஷ் கிருஷ்ணன், ரேஸ்கோர்ஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று மீட்பு பணிக்கான நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்த தீவிபத்து குறித்து அந்த பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் கூறியதாவது:

முதலில் பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்டது. யாராவது முக்கிய பிரமுகர்கள் வருகையையொட்டி பட்டாசு வெடிக்கிறார்கள் என்று கருதினோம். அதன்பின்னர்தான் துணிக்கடையில் பட்டாசு வெடித்தது தெரியவந்தது. வெடி விபத்தில் அருகில் உள்ள வணிக வளாகத்தின் முதல் மாடியில் இருந்த கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. ராக்கெட் பட்டாசுகள் வெடித்து சிதறியதில் அருகில் நிறுத்தப்பட்டு இருந்த மொபட் தீப்பிடித்து எரிந்தது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட கார் உதிரிபாக விற்பனையாளர் சிவராமன் கூறும்போது, காலை 9 மணிக்கு கடையை திறக்க காரில் வந்தேன். காரை நிறுத்திவிட்டு கடை ஷட்டரை திறந்தேன். அப்போது துணிக்கடையின் ஒரு மூலையில் இருந்து பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. உடனடியாக கடையில் மின் இணைப்பை துண்டித்தேன். அதற்குள் எனது கடையிலும் தீப்பற்றி லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகிவிட்டது.

கட்டிட உரிமையாளரின் மருமகன் புகழேந்தி எனது கடையின் ஒரு பகுதியை அடைத்து துணிக்கடை வழியாக ஷட்டர் வைத்து தீபாவளியின் போது பட்டாசு விற்பனை செய்து வந்தார். விற்றது போக மீதம் உள்ள பட்டாசு குவியலில் பற்றிய தீயினால்தான் இந்த தீவிபத்து ஏற்பட்டதாக கருதுகிறேன் என்று கண்ணீருடன் கூறினார்.

பட்டாசுகளை எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல், துணிக்கடைக்குள் பதுக்கி வைத்து இருந்தது குறித்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். மின்சார கோளாறு காரணமாகவும், வெப்பத்தின் காரணமாகவும் பட்டாசுகள் வெடித்து அதன்பின்னர் மற்ற கடைகளுக்கும் தீ பரவியதாக தீயணைப்பு படையினர் தெரிவித்தனர்.

3 கடைகளில் தீப்பற்றிக்கொண்டதால் திருச்சி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அருகில் உள்ள ஓட்டல்கள் மற்றும் கடைகளும் அடைக்கப்பட்டன. தீ முழுவதும் அணைக்கப்பட்ட பின்னர் பகல் 12 மணிக்கு பின்னர் போக்குவரத்து சீரானது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com