

ஓசூர்,
ஓசூர் கிருஷ்ணாநகர் 11வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 40). பெங்களூருவில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார். இவருக்கு பிருந்தா என்ற மனைவி, ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். கண்ணன் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு, சேலம் இரும்பாலை பகுதியில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றார்.
இந்த நிலையில் நேற்று காலை கண்ணன் வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், வீட்டிற்குள் சென்று பார்த்தார். அங்கு பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 27 பவுன் நகை, 10 பட்டு புடவை, ரூ. 12 ஆயிரம், 2 கிலோ வெள்ளி பொருட்களை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.6 லட்சம் இருக்கும்.
இது தொடர்பாக கண்ணன் சிப்காட் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி தலைமையிலான போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினார்கள். மேலும் கைரேகை நிபுணர்களும் கொள்ளை நடந்த இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்து கொண்டனர். இது தொடர்பாக சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.