திருச்செந்தூர் அருகே: விபத்தில் தபால் நிலைய உதவி அதிகாரி பலி - பேத்திக்கு பால் வாங்க சென்றபோது சோகம்

திருச்செந்தூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் மொபட்டில் சென்ற தபால் நிலைய உதவி அதிகாரி பலியானார். பேத்திக்கு பால் வாங்க சென்றபோது அவர் இந்த விபத்தில் சிக்கி கொண்டார்.
திருச்செந்தூர் அருகே: விபத்தில் தபால் நிலைய உதவி அதிகாரி பலி - பேத்திக்கு பால் வாங்க சென்றபோது சோகம்
Published on

திருச்செந்தூர்,

மெஞ்ஞானபுரம் அருகே நங்கைமொழியைச் சேர்ந்தவர் நாகலிங்கம் (வயது 50). இவர் திருச்செந்தூர் தபால் நிலையத்தில் உதவி அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவருக்கு அரியநாச்சியார் என்ற மகளும், திரவியவேல் என்ற மகனும் உள்ளனர். அரியநாச்சியாருக்கு திருமணமாகி விட்டது. இவர் திருச்செந்தூர் அருகில் உள்ள கிருஷ்ணா நகரில் வசித்து வருகிறார். இவருடைய கணவர், வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு சுபிக்ஷனா(3) என்ற குழந்தை உள்ளது.

நாகலிங்கத்தின் மனைவி அமுதா, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் அவர் தன்னுடைய மகனுடன் அரியநாச்சியார் வீட்டில் வசித்து வந்தார். திரவியவேல் தூத்துக்குடியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.

நேற்று முன்தினம் அவர், தன்னுடைய மகன், மகளுடன் சொந்த ஊரான நங்கைமொழியில் உறவினரின் துக்க வீட்டுக்கு சென்றார். பின்னர் அவர்கள் இரவில் கிருஷ்ணாநகருக்கு திரும்பி வந்தனர். நள்ளிரவில் அரியநாச்சியாரின் குழந்தைக்கு பால் வாங்குவதற்காக, நாகலிங்கம் தனது மொபட்டில் கிருஷ்ணாநகரில் இருந்து திருச்செந்தூருக்கு சென்றார்.

திருச்செந்தூர்-நெல்லை ரோட்டில் குமாரபுரம் அருகே சென்றபோது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் திடீரென்று மொபட்டின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.

இதில் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அந்த வழியாக சென்றவர்கள் கொடுத்த தகவலின் பேரில் திருச்செந்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். வாகனம் மோதி இறந்த அவருடைய உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com