

வேதாரண்யம்,
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் தங்கியிருந்து மீன்பிடித்தொழில் செய்து வருகின்றனர். அதேபோல ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் கோடியக்கரையில் தங்கி மீன்பிடித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ஜான் பிரிட்டோ என்பவருக்கு சொந்தமான படகில் ரீகன், அய்யப்பன், முனுசாமி உள்பட 7 மீனவர்கள் கோடியக்கரைக்கு அருகே மீன்பிடித்து கொண்டு இருந்த போது அங்கு வந்த இலங்கை மீனவர்கள், தமிழக மீனவர்கள் 7 பேரையும் தாக்கி அவர்களிடம் இருந்த மீன்கள், மீன்பிடி வலைகள், திசை காட்டும் கருவி ஆகியவற்றை அள்ளிக்கொண்டு தங்களது படகில் தப்பி சென்று விட்டனர்.
அதேபோல நேற்று முன்தினம் இரவு ராமேஸ்வரம் பாம்பனை சேர்ந்த மரிய பெனிட்டோ என்பவருக்கு சொந்தமான படகில் ஜான்சன், கார்மேகம் உள்பட 7 மீனவர்கள் கோடியக்கரைக்கு அருகே மீன்பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை மீனவர்கள் அவர்களை தாக்கி, படகுகளில் இருந்த மீன்கள், வலைகள் உள்ளிட்ட பொருட்களை அள்ளிக்கொண்டு தங்களது படகில் தப்பி சென்று விட்டனர். இவ்வாறு தொடர்ந்து தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல் நடத்துவது மீனவர்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2 தினங்களுக்கு முன்பு கோடியக்கரை அருகே நாகை மீனவர்களை தாக்கி, அவர்களின் மீன்களையும், வலைகளையும் இலங்கை மீனவர்கள் எடுத்து சென்றது குறிப்பிடத்தக்கது. ஆதலால் தமிழக மீனவர்கள் பாதுகாப்பாக கடலில் மீன்பிடிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.