

பேரையூர்,
பேரையூர் அருகே தேட்டத்தில் மூடைமூடையாக ரூ. 30 லட்சம் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரகசிய தகவல்
மதுரை டி.ஐ.ஜி. தனிபடையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த அருண் பாண்டியன் என்பவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் தன் நண்பர்களுடன் புகையிலை பொருட்களை மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள மாந்தோப்பு தோட்டத்தில் பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து மதுரை சரக டி.ஐ.ஜி. பொன்னி உத்தரவின் பேரில், மதுரை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆலோசனையின் பேரில், பேரையூர் போலீஸ் துண சூப்பிரண்டு சரோஜா, இன்ஸ்பெக்டர் காந்தி மற்றும் டி.ஐ.ஜி. தனிப்படை சப்- இன்ஸ்பெக்டர் கவுதம் விஜய் தலைமையிலான தனிப் படையினர் பேரையூர் சாப்டூர் ரோட்டில் கணவாய்பட்டி விலக்கு அருகே உள்ள மாந்தோப்பு தோட்டத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
பறிமுதல்
அப்போது அங்கு மூடை மூடையாக குட்கா போதைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிந்தது. அங்கிருந்த 133 மூடைகளில் 1,872 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட குட்கா போதைப் பொருட்களின் மதிப்பு ரூ.30 லட்சமாகும். மேலும் ரூ.87ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. 2 சொகுசு கார்கள், ஒரு சரக்கு வாகனம் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது
இதுதொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த ராசு மகன் முத்துக்குமார் (வயது25), ஸ்ரீவில்லிபுத்தூர் அய்யம்பட்டியை சேர்ந்த குருநாதன் மகன் அருண்பாண்டி ( 27) நென்மணியை சேர்ந்த பாலமுருகன் மகன் சரவணமணிகண்டன் ( 33) தொட்டணம்பட்டி சேர்ந்த பெத்துமுனியாண்டி (45) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இது தொடர் பாக சாப்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை தேடி வருகின்றனர்.