வார இறுதி ஊரடங்கால் 2-வது நாளாக கர்நாடகம் முடங்கியது

கொரோனா பரவலால் அமல்படுத்தப்பட்ட வார இறுதி ஊரடங்கால் 2-வது நாளாக நேற்றும் கர்நாடகம் முடங்கியது. ஊரடங்கை மீறி வெளியே சுற்றியவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். மேலும் அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதால் வாக்குவாதம் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
வார இறுதி ஊரடங்கால் 2-வது நாளாக கர்நாடகம் முடங்கியது
Published on

பெங்களூரு: கொரானா பரவலால் அமல்படுத்தப்பட்ட வார இறுதி ஊரடங்கால் 2-வது நாளாக நேற்றும் கர்நாடகம் முடங்கியது. ஊரடங்கை மீறி வெளியே சுற்றியவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். மேலும் அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதால் வாக்குவாதம் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இறைச்சி கடைகளில் குவிந்தனர்

கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக கடந்த மாதம் (டிசம்பர்) 28-ந் தேதியில் இருந்து இரவு நேர ஊரடங்கும், கடந்த வாரம் (8 மற்றும் 9-ந் தேதி) வார இறுதி நாட்களில் ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் 2-வது வாரமாக வார இறுதி நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதன் காரணமாக மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கினார்கள். இதன் காரணமாக பெங்களூரு உள்பட கர்நாடக மாநிலமே நேற்று முன்தினம் முடங்கி இருந்தது.

இந்த நிலையில், வார இறுதி நாளான நேற்றும் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்தது. அத்தியாவசிய பொருட்களுடன் இறைச்சி கடைகளை திறந்து வியாபாரம் செய்யவும் அரசு அனுமதி வழங்கி இருந்தது. இதன் காரணமாக பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் இறைச்சி கடைகள் திறக்கப்பட்டு இருந்தது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால், இறைச்சி வாங்குவதற்காக கடைகள் முன்பு பொதுமக்கள் குவிந்திருந்தனர்.

மக்கள் வீட்டுக்குள் முடக்கம்

பெரும்பாலான கடைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும், முகக்கவசம் அணியாமலும் இறைச்சி வாங்கி சென்றனர். பெங்களூருவில் ஒரு சில கடைகளில் மட்டுமே மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து நீண்ட வரிசையில் நின்று இறைச்சி வாங்கி சென்றிருந்ததை பார்க்க முடிந்தது. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் பெங்களூரு உள்பட மாநிலத்தில் உள்ள பூங்காக்கள், சுற்றுலா தளங்கள், பன்னரகட்டா உள்ளிட்ட பூங்காக்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும்.

ஆனால் ஊரடங்கு காரணமாக பூங்காக்கள், சுற்றுலா தளங்கள் மூடப்பட்டு இருந்தது. இதன் காரணமாக விடுமுறை நாளில் மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக பெங்களூருவில் அனைத்து சாலைகளிலும் வாகனங்கள் இன்றியும், மக்கள் நடமாட்டம் இன்றியும் வெறிச்சோடி காணப்பட்டது. மெஜஸ்டிக், சேட்டிலைட் பஸ் நிலையங்கள் மக்கள் நடமாட்டம் இன்றி காணப்பட்டது.

போலீசார் எச்சரிக்கை

கர்நாடகத்தில் பெங்களூரு உள்பட பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை மீறி தேவையில்லாமல் வெளியே சுற்றி திரிந்தவர்களை போலீசார் எச்சரித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றி திரிந்தவர்களிடம் இருந்து வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தார்கள். இதனால் வாகன ஓட்டிகள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று முன்தினமும், நேற்றும் ஊரடங்கு காரணமாக வியாபாரம் இன்றி வியாபாரிகள் பரிதவித்தனர். இதனால் கர்நாடக மாநிலமே 2-வது நாளாக நேற்றும் முடங்கியது.

கர்நாடகத்தில் கொரோனா பரவலை கட்டுக்குள் கடந்த 14-ந் தேதி இரவு 10 மணியில் இருந்து அமல்படுத்தப்பட்டு இருந்த 55 மணி நேர ஊரடங்கு இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணியுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து, இன்று பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் எப்போதும் போல அரசு பஸ்கள், ஆட்டோக்கள் ஓடுவதன் மூலமாகவும், கடைகள் திறக்கப்படுவதாலும் சகஜநிலைக்கு திரும்ப இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com