

பூந்தமல்லி,
டிரைவர் மாயம்
திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள பிரயாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தஸ்தகீர்ஷெரீப் (வயது 25). இவர், அந்த பகுதியில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் டிரை வராக வேலை செய்து வந்தார்.
கடந்த 4-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர், அதன் பிறகு வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர், அக்கம் பக்கம், உறவினர்கள் வீடுகள் என பல இடங்களில் தேடியும் அவரை காணவில்லை.
ஏரியில் பிணமாக மீட்பு
இந்தநிலையில் நேற்று முன்தினம் வெள்ளவேடு அருகே கோலப்பஞ்சேரி பகுதியில் உள்ள ஏரியில் ஆண் பிணம் மிதப்பதாக வெள்ளவேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஏரியில் மிதந்த பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், ஏரியில் பிணமாக கிடந்தவர், மாயமான டிரைவர் தஸ்தகீர்ஷெரீப் என்பது தெரிய வந்தது.
இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார், தஸ்தகீர்ஷெரீப்பை யாராவது அடித்துக்கொலை செய்து விட்டு உடலை ஏரியில் வீசினார்களா? அல்லது அவரே ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.