தக்காளி செடிகளை பராமரிப்பதில் விவசாயிகள் தீவிரம்

பலத்த மழை எதிரொலி காரணமாக தக்காளி செடிகளை பராமரிப்பதில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
தக்காளி செடிகளை பராமரிப்பதில் விவசாயிகள் தீவிரம்
Published on

தளி, அக்.20-

பலத்த மழை எதிரொலி காரணமாக தக்காளி செடிகளை பராமரிப்பதில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

காய்கறிகளின் பயன்பாடு

உடுமலை, தளி, அமராவதி பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்குள்ள விவசாயிகள் தென்னை, வாழை, சப்போட்டா, கொய்யா உள்ளிட்ட நீண்டகால பயிர்களையும் காய்கறிகள், தானியங்கள் போன்ற குறுகிய காலப் பயிர்களையும் சாகுபடி செய்து வருகின்றனர். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிப்பதில் காய்கறிகள் முக்கிய பங்கு வகிப்பதால் பொதுமக்களும் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் அன்றாட உணவில் காய்கறிகளின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுமக்களும் உழவர் சந்தை, தினசரி சந்தை மற்றும் தள்ளுவண்டிகளில் விற்பனை செய்யப்படும் காய்கறிகளை உற்சாகத்தோடு வாங்கி செல்கின்றனர்.

சாகுபடியில் ஆர்வம்

இதன் காரணமாக சமீப காலமாக விவசாயிகள் பல்வேறு விதமான காய்கறிகள் சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்தவகையில் உடுமலை, தளி, அமராவதி பகுதியில் கிணறு, ஆழ்குழாய் கிணறு திருமூர்த்தி மற்றும் அமராவதி அணையை நீராதாரமாக கொண்டு கத்தரி, வெண்டை, தர்பூசணி, வெள்ளரி, அவரை, புடலை உள்ளிட்ட காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

ஒரு சில விவசாயிகள் பந்தல் முறையில் பீர்க்கன், புடலை, பாகல் உள்ளிட்டவற்றை சாகுபடி செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி தக்காளி செடிகளை பலத்த மழையில் இருந்து காப்பாற்றுவதற்காக குச்சிகளை கொண்டு நிலத்தில் விழாமல் பாதுகாப்பு செய்தனர். அவற்றை பராமரிப்பு செய்து நோய்களிலிருந்தும் பாதுகாத்து வந்தனர். இதனால் செடிகளும் நல்ல முறையில் வளர்ந்து வந்தது.

தக்காளி பராமரிப்பு

இந்த சூழலில் உடுமலை பகுதியில் கடந்த வார இறுதியில் இருந்து அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தக்காளி பழங்கள் ஈரப்பதத்தை தாங்க முடியாமல் அழுகும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. உற்பத்தி குறைந்து விட்டதால் விலையும் திடீரென அதிகரித்து வருகிறது. 13 கிலோ கொண்ட தக்காளிபெட்டி ரூ.450 க்கு விற்பனையாகிறது.

அத்துடன் அவரைக்காய் கிலோ 40 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் சின்ன வெங்காயம் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. வெங்காயத்தில் விவசாயிகளுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை மற்ற காய்கறிகள் ஈடுகட்டி வருகிறது. அதன்படி அவரை மற்றும் தக்காளி விலை உயர்வால் முதலீட்டு மற்றும் பராமரிப்பு தொகை திரும்ப கிடைத்துவிடும் சுழல் நிலவுகிறது. இதனால் விவசாயிகள் தக்காளி செடிகளை பராமரித்தும் நிலத்தில் தண்ணீர் தேங்காதவாறு வடிகால் அமைத்தும் வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com