பொன்னமராவதி அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதல்; ஜவுளிகடை ஊழியர் பலி

பொன்னமராவதி அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஜவுளிகடை ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
பொன்னமராவதி அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதல்; ஜவுளிகடை ஊழியர் பலி
Published on

புதுக்கோட்டை,

பொன்னமராவதி அருகே உள்ள மைலாப்பூர் பிள்ளையார்பட்டியை சேர்ந்தவர் ராமையா. இவரது மகன் பழனியப்பன் (வயது 24). இவர் பொன்னமராவதியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார். இவர் தினமும் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் ஜவுளிக்கடைக்கு வேலைக்கு சென்று வருவது வழக்கம்.

அதேபோல் நேற்று முன்தினம் இரவும் வழக்கம்போல் ஜவுளிக்கடையில் வேலையை முடித்து விட்டு பழனியப்பன் மோட்டார் சைக்கிளில் பிள்ளையார்பட்டியை நோக்கி சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிள் பொன்னமராவதி சிவன்கோவில் பகுதியில் உள்ள நாட்டுக்கல் சாலையில் வந்தபோது சாலையின் குறுக்கே ஒரு மாடு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பழனியப்பன் உடனடியாக மோட்டார் சைக்கிளில் பிரேக் பிடித்து உள்ளார்.

இதனால் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையின் ஓரத்தில் இருந்த மின்கம்பத்தின் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த பழனியப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பொன்னமராவதி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பழனியப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வலையப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com