காதல் தகராறில் நர்சு தற்கொலை

வேப்பூர் அருகே காதல் தகராறில் நர்சு தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக காதலன் கைது செய்யப்பட்டார்.
காதல் தகராறில் நர்சு தற்கொலை
Published on

வேப்பூர்,

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த வரம்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகள் சுகப்பிரியா (வயது 19). நர்சிங் படித்துள்ள இவர் சென்னையில் உள்ள தனியா ஆஸ்பத்திரியில் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுகப்பிரியா வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் தொடர்ந்து வீட்டிலேயே இருந்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு சுகப்பிரியா வீட்டின் மேற்கூரையில் துப்பட்டாவால் தூக்குப்போட்டுக் கொண்டார். இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக வேப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சுகப்பிரியா பரிதாபமாக உயிரிழந்தார்.

காதல்

இதுபற்றி அறிந்த வேப்பூர் போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை பார்த்து வரும் விருத்தாசலம் அடுத்த தீவளூர் கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் மகன் அஜித்குமார் (24), வரம்பனூரில் உள்ள தனது அக்காள் வீட்டிற்கு அடிக்கடி வருவது வழக்கம். அவ்வாறு வந்து செல்லும் போது இவருக்கும், சுகப்பிரியாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறியது.

காதலன் கைது

இந்த நிலையில் சுகப்பிரியா விடுமுறைக்கு வீட்டிற்கு வந்த போது, இவர்களது காதல் விவகாரம் சுகப்பிரியாவின் குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து சுகப்பியாவை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சுகப்பிரியா வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து அவரது வீட்டிற்கு அஜித்குமார் சென்றுள்ளார்.

அப்போது, இருவருக்கும் இடையே காதல் விவகாரம் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், மனமுடைந்த சுகப்பிரியா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து சுகப்பிரியாவை தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்குப்பதிந்து அவரது காதலன் அஜித்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com