குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு

மதுபான கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், குடிநீர் வழங்கக்கோரியும் பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு
Published on

கரூர்,

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். தொடர்ந்து பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார். இதில் கரூர் சின்னகுளத்துப்பாளையம் பகுதி பொதுமக்கள் ஒரு மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

எங்கள் பகுதியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகிறோம். இந்த நிலையில் சின்னகுளத்துப்பாளையம் பகுதியில் உள்ள கரூர்-சேலம் ரெயில்வே கேட் அருகில் அரசு மதுபான கடை அமைப்பதற்கான முதல் கட்ட பணிகள் நடக்கிறது. இந்த பகுதியில் மதுபான கடை வந்தால் மாணவ- மாணவிகள் மிகவும் சிரமப்படும் நிலை ஏற்படும். மேலும் பல்வேறு அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே சின்னகுளத்துப்பாளையத்தில் மதுபான கடை அமைக்க கூடாது.

இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

மதுபான கடை அமைக்க எதிர்ப்பு

இதேபோன்று காணியாளம்பட்டி பகுதி பொதுமக்கள் ஒரு மனு கொடுத்தனர். அதில், காணியாளம்பட்டியில் செயல்பட்டு வந்த அரசு மதுபான கடையை அகற்றிவிட்டு அருகில் உள்ள வயல்காட்டு பகுதியில் மதுபான கடை அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. வயல்காட்டு பகுதியில் மதுபான கடை அமைத்தால் அந்த வழியாக ஆடு, மாடு மேய்க்க செல்லும் பெண்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதேபோன்று விவசாயிகளுக்கும் பல்வேறு பிரச்சினை ஏற்படும். எனவே காணியாளம்பட்டி வயல்காட்டு பகுதியில் மதுபான கடை அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.

ஆண்டவர்நகர் பகுதியில் அமைக்க உள்ள அரசு மதுபான கடையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மனு கொடுத் தனர்.

மாற்ற வேண்டும்

மாயனூர் அருகே உள்ள குண்டாங்கல்பட்டி பகுதி பொதுமக்கள், மாணவ- மாணவிகள் சேர்ந்து ஒரு மனு கொடுத்தனர். அதில், மாயனூர் அருகே உள்ள மதுக்கரையில் மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த வழியாக தான் மாணவ- மாணவிகள் பள்ளி, கல்லூரிக்கு செல்ல வேண்டும். இதனால் தினமும் பல்வேறு சிரமங்களுக்கு மாணவ- மாணவிகள் ஆளாகி வருகின்றனர். எனவே மதுக்கரையில் இயங்கி வரும் மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளனர்.

குடிநீர்

அரவக்குறிச்சி தாலுகாவிற்கு உட்பட்ட நாகம்பள்ளி அருகே உள்ளே மூலப்பட்டி காலனியை சேர்ந்த பொதுமக்கள் ஒரு மனு கொடுத்தனர். அதில், தங்கள் பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இங்கு உள்ள ஆழ்குழாய் கிணற்றில் தண்ணீர் இல்லை. இதனால் கடந்த சில மாதங்களாக குடிநீருக்கு மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். தற்போது ஒரு கேன் குடிநீர் ரூ.40 விலை கொடுத்து வாங்கி குடிக்கும் நிலையில் உள்ளோம். எனவே புதிய ஆழ்குழாய் கிணறு அமைத்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இறந்துபோய்விடும்

மாவத்தூர் ஊராட்சிக்குட் பட்ட வெங்கடேஸ்வரா நகர் பகுதி பொதுமக்கள் குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் வந்து மனு கொடுத்தனர்.

கடவூர் கிழக்கு அய்யம்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் ஒரு மனு கொடுத்தனர். அதில், குடிநீர் இன்றி மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். கால்நடைகளும் தண்ணீர் இன்றி தவித்து வருகின்றன. இன்னும் சில நாட்கள் இதே நிலை நீடித்தால், ஆடு, மாடுகள் தண்ணீர் இன்றி இறந்து போய்விடும். எனவே எங்கள் பகுதிக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

பட்டா வழங்க கோரி...

கரூர் வ.உ.சி.தெரு பகுதி பொதுமக்கள் ஒரு மனு கொடுத்தனர். அதில், 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த பல ஆண்டுகளாக இந்த பகுதியில் புறம்போக்கு நிலத்தில் குடியிருந்து வருகிறோம். இந்த நிலையில் எங்களது வீட்டை காலி செய்யக்கோரி அதிகாரிகள் உள்பட பலர் வற்புறுத்துகின்றனர். எனவே நாங்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

அனுமதிக்க வேண்டும்

அரவக்குறிச்சி தாலுகாவிற்கு உட்பட்ட ராஜபுரம் கிராமத்தில் உள்ள மாட்டு வண்டி தொழிலாளர்கள், பொதுமக்கள் சேர்ந்து ஒரு மனு கொடுத்தனர். அதில், எங்கள் பகுதியில் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இங்கு பலர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை சாராயம் காய்ச்சும் தொழில் செய்து வந்தோம். அப்போது மாவட்ட நிர்வாகம் எங்களை அழைத்து சாராயம் காய்ச்ச கூடாது. அதற்கு பதிலாக வங்கி மூலம் கடன் பெற்று மாட்டு வண்டி வாங்கி அமராவதி ஆற்றில் மணல் அள்ளி பிழைப்பு நடத்துங்கள் என்று கூறியதன் அடிப்படையில் சாராய தொழிலை விட்டு விட்டு வங்கியில் கடன் வாங்கி ராஜபுரம் பகுதியில் அமராவதி ஆற்றில் மாட்டு வண்டியில் மணல் அள்ளி கட்டிட வேலைக்கு விற்று பிழைப்பு நடத்தி வருகிறோம். இந்த நிலையில் தற்போது அமராவதி ஆற்றில் மணல் அள்ளக்கூடாது. மீறி அள்ளினால் குண்டர் சட்டத்தில் கைது செய்வோம் என்று மிரட்டுகின்றனர். இதனால் மணல் அள்ளுவதை விட்டு விட்டோம். இதனால் சிரமப்பட்டு வருகிறோம். எனவே மாட்டு வண்டியில் தொடர்ந்து மணல் அள்ள அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

பரபரப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட குழு உறுப்பினர் வேலுச்சாமி ஒரு மனு கொடுத்தார். அதில், மதுரை, சேலம், கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு கரூர் அருகே உள்ள திருக்காம்புலியூர் பகுதியில் உள்ளது. இங்கு உள்ள ரவுண்டானாவை சுற்றி 4 இடங்களில் பஸ் நிறுத்தம் உள்ளது. இதனால் ரவுண்டானா பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே விபத்தை தடுக்கும் விதமாக சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதேபோன்று நேற்று ஏராளமானவர்கள் தங்கள் கோரிக்கை அடங்கிய மனுவை கொடுத்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். நேற்று நடந்த கூட்டத்தில் குடிநீர் வழங்கக் கோரியும், மதுபான கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும் கூட்டம், கூட்டமாக பொதுமக்கள் மனு கொடுக்க வந்ததால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com