

திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படையில் போலீசாக பணிபுரிபவர் சரண்யா (வயது 22). இவருடைய கணவர் பிரவீன்குமார், காஷ்மீரில் ராணுவ அதிகாரியாக உள்ளார். சரண்யா, திருவள்ளூரில் தன்னுடைய ஒரு வயது மகன், அக்காள் மணிகண்டதேவி (25), தாத்தா சுருளிராஜன் ஆகியோருடன் வசித்து வருகிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு சரண்யா, டெல்லி ஆயுதப்படை போலீசில் சேர்ந்த போது அங்கு அதே பிரிவில் பணியாற்றிய சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கல்லான் என்ற கல்லனை (24), திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த அமிர்தராஜ் (24) ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் அவர்களுக்குள் நெருக்கத்தை ஏற்படுத்தியது.
கடந்த ஆண்டு பணிமாறுதல் ஆகி கல்லனை, சரண்யா இருவரும் திருவள்ளூர் ஆயுதப்படைக்கும், அமிர்தராஜ் சென்னை ஆயுதப்படைக்கும் வந்தனர். அமிர்தராஜ், அடிக்கடி திருவள்ளூர் வந்து சரண்யாவை பார்த்து செல்வார். அதே ஊரில் இருப்பதால் கல்லனையும் சரண்யாவை அடிக்கடி சந்தித்து வந்தார்.
சரண்யாவுடன் பழகுவதில் அமிர்தராஜூக்கும், கல்லனைக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. 4ந் தேதி இரவு அமிர்தராஜ், சரண்யாவை பார்க்க திருவள்ளூருக்கு வந்தார். இதை அறிந்த கல்லனை, தன்னுடன் பணிபுரியும் ஆயுதப்படை போலீசார் சுந்தரபாண்டி (24), சந்திரன் (23), சந்தானகுமார் (24) ஆகியோருடன் குடிபோதையில் சரண்யா வீட்டுக்கு சென்றார்.
அப்போது ஏற்பட்ட மோதலில் அமிர்தராஜ், போலீஸ்காரர் சுந்தரபாண்டியை கத்தியால் குத்திக்கொலை செய்தார். இதை தடுக்க வந்த போலீஸ்காரர் சந்திரன், சரண்யாவின் அக்காள் மணிகண்டதேவி, தாத்தா சுருளிராஜன் ஆகியோருக்கும் கத்திக்குத்து விழுந்தது. இதை பார்த்து கல்லனையும், சந்தானகுமாரும் தப்பி ஓடிவிட்டனர். காயம் அடைந்த அனைவரும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இது தொடர்பாக போலீஸ்காரர் சந்திரன் அளித்த புகாரின் பேரில் திருவள்ளூர் டவுன் போலீசார், அமிர்தராஜை கைது செய்தனர். அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டன. போலீஸ் விசாரணை முடிந்து அமிர்தராஜ், புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
சரண்யாவின் அக்காள் மணிகண்டதேவி அளித்த புகாரின் பேரில் சந்திரன், கல்லனை, சந்தானகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த கள்ளக்காதல் மோதலுக்கு காரணமான சரண்யாவை போலீசார் தங்களது பிடியின் கீழ் வைத்து விசாரித்து வருகின்றனர். சுந்தரபாண்டி கொலையில் சரண்யா, 2வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த மோதல் சம்பவம் காரணமாக ஆயுதப்படை போலீஸ்காரர்களான சரண்யா, கல்லனை, சந்திரன், சந்தானகுமார் ஆகிய 4 பேரையும் பணி இடைநீக்கம் செய்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் உத்தரவிட்டார்.
போலீஸ்காரர் சுந்தரபாண்டியை கொலை செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமிர்தராஜ், பணிநீக்கம் செய்யப்பட்டதாக போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது. இது போலீசாரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.