

கோவை
கோவை மாவட்ட பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் கோவை புதிய கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வளர்ச்சிமன்ற கூட்டரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் ஹரிகரன் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை பெற்றார்.
இந்து மக்கள் கட்சி சார்பில் கோவை மாநகர் மாவட்ட தலைவர் வி.பி.மாணிக்கம் தலைமையில் அந்த கட்சியினர் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறி இருப்பதாவது:
கோவை வெள்ளானைப்பட்டி, மயிலம்பட்டி கிராமங்களில் உள்ள 600 ஏக்கர் நிலத்தில் விழும் மழை நீர் முழுவதும் நீரோடைகள் வழியாகத்தான் குட்டைக்கு செல்கிறது. தற்போது இந்த நீரோடைகளை பட்டா நிலங்கள் என்று கூறி நில விற்பனைக்காக தரைமட்டமாக சமன் செய்து, அழித்து விட்டு, மனையிடங்களாக பிரித்து விற்பனைக்கு விலை பேசி வருகின்றனர். ஆகவே இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் அதில் கூறி உள்ளனர்.
இந்து மக்கள் கட்சி மகளிர் அணி சார்பில் அமைப்பாளர் நிர்மலா தேவி தலைமையில் அந்த அணியை சேர்ந்த பெண்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில், கோவை பாப்பம்பட்டி பகுதியில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள 80க்கும் மேற்பட்ட பெண்கள் வீடு இல்லாமல் சிரமப்படுகின்றனர். தங்களின் குறைவான வருமானத்தை கொண்டுதான் அன்றாடம் தங்களின் வாழ்க்கையை நடத்தும் நிலை உள்ளது. எனவே அவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறி உள்ளனர்.
கண்ணம்பாளையம் பேரூராட்சி முன்னாள் தலைவர் தளபதி முருகேசன் தலைமையில் பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருப்பதாவது:
கோவை மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் சுதந்திரப்போராட்ட தியாகிகள் வாழ்ந்த பகுதி கண்ணம்பாளையம் பேரூராட்சி பகுதியாகும். இந்த பகுதியில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறக்க கூடாது என்று ஏற்கனவே பேரூராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இருந்தபோதிலும் தற்போது சூலூர்திருச்சி சாலையில் நரசிம்மாமில் அருகில் டாஸ்மாக் கடையை திறந்துள்ளனர்.
மேலும் வேறு பேரூராட்சிகளில் இயங்கி வருகின்ற டாஸ்மாக் மதுக்கடைகளை கண்ணம்பாளையம் பேரூராட்சி பகுதியில் திறப்பதற்கு ஏற்பாடுகள் நடந்து வருகிறது. பெண்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் நடந்து செல்லும் பகுதிகளில் டாஸ்மாக் மதுக்கடையை திறந்தால் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். ஆகவே செயல்படும் டாஸ்மாக் மதுபானக்கடையை அகற்ற வேண்டும். புதிய மதுக்கடைகளை திறக்க கூடாது.
இவ்வாறு அவர்கள் அதில் கூறி உள்ளனர்.
இதுபோன்று கோவை கண்ணப்பநகர், சங்கனூர் பகுதி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறி இருப்பதாவது:
கண்ணப்பநகர் பஸ் நிறுத்த பகுதியில் இருந்து 200 அடி தூரத்தில் கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த மதுபானக்கடையால் அந்த பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். மேலும் போக்குவரத்து நெருக்கடியால் விபத்துகள் ஏற்பட்டு பலர் உயிர் இழந்தனர். இந்த நிலையில் அந்த மதுக்கடையை மாற்றக்கோரி போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் அந்த மதுக்கடை மாற்றப்பட்டது.
மீண்டும் அதே பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆகவே அதற்கு அனுமதி அளிக்க கூடாது. அனுமதி அளித்தால் அந்த பகுதியில் சட்டம்ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படும். நிம்மதியாக பொதுமக்கள் தங்களின் வாழ்க்கையை நடத்த முடியாது. மேலும் அதே பகுதியில் செயல்படும் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் அதில் கூறி உள்ளனர். இதுபோன்று பல்வேறு பகுதிகளில் புதிதாக திறக்கப்படும் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் மகளிரணி செயலாளர் க.சு.லலிதா தலைமையில் அளித்த மனுவில், சமீபத்தில் மத வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட பாரூக்கின் 2 குழந்தைகளின் கல்வி, மற்றும் எதிர்காலத்தை பாதுகாக்கும் வகையில் அவரது மனைவி ரஷீதாவுக்கு அரசுப்பணி வழங்கி உதவ வேண்டும் என்று கூறி இருந்தனர்.
இது போல் துப்புரவு பணியாளர்களுக்கு குறைந்த பட்ச கூலி நிர்ணயம் செய்து, நாள் ஒன்றுக்கு ரூ.1000க்கும் மேல் நிர்ணயிக்க வேண்டும் என்று சமத்துவ கழகத்தினர் மனு கொடுத்தனர்.
கோவை பீளமேட்டில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரி மாணவமாணவிகள் கலெக்டர் அலுவலக வளாகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் அளித்த மனுவில், கல்லூரியில் சோதனைக்கூடம் உள்பட அடிப்படை வசதிகள் மற்றும் கல்வித்தரத்தை மேம்படுத்த ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று மனுகொடுத்தனர்.