

குடியாத்தம்,
குடியாத்தம் வனச்சரக அலுவலர் குமார், வனவர் அரி, வனக்காப்பாளர்கள் தயாளன், ரங்கநாதன் உள்ளிட்ட வனத்துறையினர் நேற்று முன்தினம் இரவு கே.வி.குப்பத்தை அடுத்த மேல்மாயில் மயிலாடும்பாறை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து வனத்துறையினர் அப்பகுதியை சுற்றி வளைத்தபோது அங்கு முயலை வேட்டையாடிய 2 பேர் பிடிபட்டனர். ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.
பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தியதில், கே.வி.குப்பத்தை அடுத்த மேல்மாங்குப்பம் கிராமத்தை சேர்ந்த ஊர்காவல் படை வீரர் இளங்கோ (வயது 35), அதே பகுதியை சேர்ந்த கதிர்வேல் மகன் ஜெகதீஷ் (வயது 28) என்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து வனத்துறையினர் அவர்களிடம் இருந்து ஒரு நாட்டு துப்பாக்கி, வேட்டையாடிய முயல் மற்றும் துப்பாக்கிக்கு பயன்படுத்தும் மருந்து பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து வனத்துறையினர் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய ரமேஷ் என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர்.