நெல்லை மாவட்டத்தில் 3-வது நாளாக மழை குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு

நெல்லை மாவட்டத்தில் 3-வது நாளாக மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
நெல்லை மாவட்டத்தில் 3-வது நாளாக மழை குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு
Published on

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் 3-வது நாளாக மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. பாளையங்கோட்டையில் வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

பலத்த மழை

நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி இருப்பதால் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று 3-வது நாளாக நெல்லை, சேரன்மாதேவி, அம்பை மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

நெல்லையில் நேற்று முன்தினம் இரவு பெய்த தொடர் மழையால் பாளையங்கோட்டை சேவியர் காலனியில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து மக்கள் வெளியே செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். சேவியர் காலனியின் நடுவே அமைந்திருந்த பெரிய ஓடை வழியாக வேய்ந்தான் குளத்துக்கு தண்ணீர் செல்லும்.

ஆனால் அந்த ஓடை பகுதி வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு, வீடுகள் கட்டப்பட்டு விட்டன. இதனால் அந்த பகுதியில் வரும் தண்ணீர் வெளியேறுவதற்கு இடமின்றி வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இதை தவிர்க்கும் வகையில் இப்போதே மழைநீர் செல்ல மாநகராட்சி அதிகாரிகள் வழி ஏற்படுத்த வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அணைகளின் நீர்மட்டம்

பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று 70.25 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 692 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பாபநாசம் அணை நீர்பாசன பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வரை வினாடிக்கு 1,500 கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. ஆனால் நேற்று பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீர் வினாடிக்கு 826 கன அடியாக குறைக்கப்பட்டது.

சேர்வலாறு அணை நீர்மட்டம் 79.07 அடியாக உள்ளது. அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படவில்லை. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 51.60 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 92 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு


குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலையில் இருந்தே லேசான மழை பெய்தது. இதனால் மெயின் அருவியில் காலையில் மிதமான அளவில் தண்ணீர் விழுந்தது. அதில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். மாலையில் மலையின் உள்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக இரவு 7 மணி அளவில் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தண்ணீர் ஆர்ச்சை தாண்டி விழுந்தது. இதில் குளிப்பது ஆபத்து என்பதால் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். தற்போது, சீசன் இல்லாத காலத்தில் குறைந்த அளவு சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வந்தனர். அவர்கள் மற்ற அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.

சுவர் இடிந்தது

முக்கூடலில் நேற்று மாலை 4 மணி முதல் 6.30 வரை இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மழைநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழைக்கு முக்கூடல் குமாரவேல் தெருவில் வசித்து வரும் வசந்தி என்பவரின் வீட்டின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் யாருக்கும் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

மழை அளவு

நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

கருப்பாநதி -26, கொடுமுடியாறு -15, பாபநாசம் -14, சேர்வலாறு -6, மணிமுத்தாறு -5.4, அடவிநயினார் -4, ராமநதி -3, குண்டாறு -2, கடனாநதி -1, சேரன்மாதேவி 64.4, பாளையங்கோட்டை -41.4, சங்கரன்கோவில் -40, நெல்லை -25, சிவகிரி -17.2, ராதாபுரம் -14, ஆய்க்குடி -4.8, அம்பை -4.3, தென்காசி -3.6, செங்கோட்டை -3, நாங்குநேரி -3.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com