பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்

குமரியில் பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்
Published on

குலசேகரம்:

குமரியில் பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

பேச்சிப்பாறை அணை

குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ, கும்பப்பூ என 2 பருவ நெல்சாகுபடி நடைபெறுகிறது. கடந்த வருடம் ஜூன் மாதம் முதல் பருவமான கன்னிப்பூ பருவ சாகுபடிக்காக பேச்சிப்பாறை உள்ளிட்ட அணைகள் திறக்கப்பட்டன. இதை தொடர்ந்து முதல் பருவ அறுவடை பணிகள் நிறைவடைந்த பின்னர் அணைகள் மூடப்பட்டு 2-ம் பருவமான கும்பப்பூ பருவ சாகுபடிக்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மீண்டும் அணைகள் திறக்கப்பட்டன.

அப்போது பெய்த தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக நடவு பணிகள் தாமதமாகின. மேலும் பேச்சிப்பாறை அணையின் கால்வாயில் பெரும் உடைப்பும் ஏற்பட்டிருந்தது. இதையடுத்து பெருஞ்சாணி அணையில் இருந்து பாசனத்திற்காக அதிக நாட்கள் தண்ணீர் விடப்பட்டது. பேச்சிப்பாறை அணையில் இருந்து பிப்ரவரி மாத தொடக்கத்தில் இருந்து தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

தண்ணீர் திறப்பு நிறுத்தம்

பொதுவாக குமரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் திருவிழா நிறைவடைந்த பின்னர் பிப்ரவரி மாதம் இறுதியில் அணைகள் மூடப்படும். ஆனால் நடப்பாண்டில் நடவு பணிகள் தாமதமான நிலையாலும், நிலத்தடி நீரை தக்க வைக்க வேண்டுமென்பதாலும் கூடுதல் நாட்கள் அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டுமென்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதனால் அணைகள் மூடல் மார்ச் இறுதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இதில் பெருஞ்சாணி அணை கடந்த 19-ந் தேதி மூடப்பட்ட நிலையில், சிற்றாறு அணைகள் 29-ந் தேதி மூடப்பட்டன. இந்தநிலையில் பிரதான அணையான பேச்சிப்பாறை அணை நேற்று மாலை 6 மணிக்கு மூடப்பட்டது.

நேற்றைய நிலைவரப்படி பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 36.45 அடியாக இருந்தது.

33.23 சதவீத தண்ணீர்...

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், குமரி 2 -ம் பருவ சாகுபடி பணிகள் நிறைவடைந்து அறுவடையை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அணைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இனி வரும் ஜூன் மாதம் கன்னிப்பூ சாகுபடிக்காக மீண்டும் அணைகள் திறக்கப்படும்.

மாவட்டத்தில் தற்போது பிரதான அணைகளில் 33.23 சதவீத அளவுக்கு தண்ணீர் இருப்பு உள்ளது. மேலும் கோடை மழை பெய்யவும் வாய்ப்புகள் உள்ளன. எனவே வரும் ஜூன் மாதம் முதல் பருவ நெல் சாகுபடி தொடங்குவதற்கு தேவையான அளவுக்கு தண்ணீர் அணைகளில் உள்ளது என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com