

புதுச்சேரி,
புதுச்சேரி முதல்- அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம், டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார் ஆகியோர் நேற்று டெல்லி சென்றனர். அங்கு அவர்கள் மத்திய நீர்வள மேம்பாட்டு துறை மந்திரி உமாபாரதியை சந்தித்துப் பேசினர்.
வெள்ளநீர் திட்டத்துக்கு ரூ.122 கோடி
அப்போது கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் நானும், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அதிகாரிகளும் புதுவை நகர பகுதிகளில் உள்ள தாழ்வான பகுதிகளை பார்வையிட்டு மழைநீர் தேங்கி நிற்காமல் சுலபமாக வடிவதற்காக ஒரு திட்ட வரைவு அறிக்கையை தயாரித்து அதுகுறித்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு புதுவை அரசால் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த திட்டத்தின்படி தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்காமல் உடனடியாக வழிந்தோட வெள்ள நீர் வடிகால் திட்டத்திற்காக ரூ.122 கோடியை மத்திய அரசு மாநில அரசுக்கு ஒதுக்கித் தர வேண்டும். இந்த திட்டத்தை நிறைவேற்றினால் நகர பகுதியில் உள்ள அனைவரும் பயன்பெறுவர் என்று மத்திய மந்திரி உமாபாரதியிடம் முதல்- அமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தினார். இதற்கு பதில் அளித்த உமாபாரதி, இந்த கோரிக்கை குறித்து ஆய்வு செய்து நிதியை ஒதுக்குவது தொடர்பான ஏற்பாடுகளை செய்வதாக உறுதி அளித்தார்.
பயன்பெறும் பகுதிகள்
இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் புதுவையில் உள்ள காமராஜர் நகர், உப்பளம், உருளையன்பேட்டை, நெல்லித்தோப்பு ஆகிய தொகுதிகளில் உள்ள தாழ்வான பகுதிகளுக்கு வெள்ளம் புகுவது தடுக்கப்படும். இதன்மூலம் இந்த பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகளில் வசிக்கும் மக்கள் பயன்பெறுவார்கள்.
ஸ்மார்ட் சிட்டி திட்டம்
இதன்பின் மத்திய நகர்ப்புற வளர்ச்சி மந்திரி வெங்கையா நாயுடுவை நாராயணசாமி சந்தித்துப் பேசினார். புதுவை மாநிலத்தில் நிறைவேற்றப்பட உள்ள ஸ்மார்ட் சிட்டி திட்டம் குறித்தும் புதுச்சேரி மாநிலம் தொடர்பாக மேலும் சில கோரிக்கைகளையும் அவரிடம் நாராயணசாமி வலியுறுத்தினார்.
நாடு முழுவதும் காரைக்கால் உள்ளிட்ட 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த 22 நிறுவனங்களுடன் மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திரபிரதான் நேற்று கையெழுத்திட்டது குறித்து கேட்டபோது முதல் -அமைச்சர் நாராயணசாமி கூறியதாவது:-
காரைக்கால் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து புதுச்சேரி அரசுக்கு மத்திய அரசு எந்த தகவலும் அனுப்பவில்லை. இந்த திட்டத்தின் மூலம் என்ன செய்யப்போகிறார்கள் என்பது உள்பட எந்த தகவல்களையும் மத்திய அரசு எங்களுடன் பகிர்ந்து கொள்ளவில்லை.
அனுமதிக்க மாட்டோம்
இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக மத்திய அரசும் சம்பந்தப்பட்ட நிறுவனமும் எங்களை நாடினால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடமும் கருத்துக்களை கேட்டு அதன்பிறகுதான் புதுச்சேரி அரசு உரிய முடிவு எடுக்கும்.
ஒருவேளை மக்கள் இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தால் அதனை கண்டிப்பாக செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம். பொதுமக்களுக்கு எதிரான எந்த திட்டத்தையும் புதுச்சேரி அரசு அனுமதிக்காது. இவ்வாறு நாராயணசாமி கூறினார்.
நீட் நுழைவுத் தேர்வு விவகாரம்
மேலும் அவர் கூறுகையில், மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் வகையில் புதுச்சேரி அரசு சார்பில் ஏற்கனவே சட்டம் நிறைவேற்ற மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருக்கிறோம். மத்திய அரசிடம் இருந்து இதுவரை அதுகுறித்து எந்த பதிலும் கிடைக்கவில்லை என்றார்.