அரும்பாக்கம் மாநகராட்சி பள்ளியில் மின்கசிவால் திடீர் தீ விபத்து

அரும்பாக்கத்தில் மாநகராட்சி பள்ளியில் மின்கசிவால் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
அரும்பாக்கம் மாநகராட்சி பள்ளியில் மின்கசிவால் திடீர் தீ விபத்து
Published on

தீ விபத்து

சென்னை அரும்பாக்கம் டி.எஸ்.டி. நகர் பகுதியில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான சென்னை அரசு நடுநிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. எல்.கே.ஜி., முதல் 8-ம் வகுப்பு வரை இயங்கும் இந்த பள்ளியில், 450 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று காலை பள்ளி வளாகத்தில் அனைத்து மாணவர்களும் இறைவணக்கத்துக்காக ஒன்று கூடினர்.

அப்போது பள்ளியின் 2-வது மாடியில் திடீரென கரும்புகை வெளியேறியது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் உடனடியாக அனைத்து மாணவர்களையும் பள்ளி வளாகத்துக்கு வெளியே பத்திரமாக அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஆசிரியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் மேலே சென்று பார்த்தபோது, அங்கு மாணவர்களின் புத்தக பைகள் எரிந்து கொண்டிருந்தது. இதையடுத்து தீயணைப்பு துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். தீயின் வேகம் அதிகமாக இருந்ததால் தீயணைப்பு துறையினருக்கு காத்திருக்காமல், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்களே விரைந்து செயல்பட்டு தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

புத்தகப் பைகள் நாசம்

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோயம்பேடு தீயணைப்பு நிலைய அதிகாரி ராஜேந்திரன் தலைமையில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அனைத்து மேலும் தீ பரவாமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தனர். இந்த நிலையில் தீ விபத்து ஏற்பட்ட பள்ளியை தீயணைப்புத்துறை இணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன் ஆய்வு செய்தார். அப்போது 7-ம் வகுப்பு படிக்கும் 25-க்கும் மேற்பட்ட மாணவர்களின் புத்தகப் பைகள் தீயில் எரிந்து நாசமாகியது தெரியவந்தது. இதையடுத்து இணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உடனடியாக தனது சொந்த செலவில் மதிய உணவும், புத்தக பையையும் வழங்கினார். இந்த நிலையில் மின்கசிவால் தீவிபத்து ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.

பள்ளியில் மாணவர்களுக்கு வாரந்தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும், இந்த விபத்தில் யாருக்கும் தீக்காயமோ அல்லது காயமோ ஏற்படவில்லை என அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயலட்சுமி தெரிவித்தார்.

மற்றொரு சம்பவம்

அதேபோல், மதுரவாயல் தனலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (70), இவரது மனைவி தனலட்சுமி (66), இவர்களுக்கு 4 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் இவர்கள் தனியாக வசித்து வரும் நிலையில், நேற்று காலை சுடு தண்ணீர் வைப்பதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைக்க முயன்ற போது ஏற்பட்ட தீவிபத்தில் கணவன், மனைவி இருவருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த மதுரவாயல் சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com