

நன்னிலம்:
பேரளத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நெல்மூட்டைகளை ஏற்றி இறக்கும் பணி
திருவாரூர் மாவட்டம் பேரளம் ரயில் நிலையத்தில் நெல் மூட்டைகள் அரவைக்காக வெளி மாவட்டங்களுக்கு சரக்கு ரயிலில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. மேலும் வெளிமாவட்டங்களில் இருந்து அரிசி மூட்டைகள் சரக்கு ரயிலில் வந்து இறங்குகின்றன. இதற்காக பேரளம் ரயில் நிலையத்தில் தளம் மற்றும் எடை-மேடை அமைக்கப்பட்டு நெல்மூட்டைகளை ஏற்றி இறக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சாலைமறியல்
இதில் 250-க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியில் உள்ளனர். அந்த இடத்தில் திடீரென கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஓ.என்.ஜி.சி. குழாய்களை இறக்கி வைத்துள்ளதால் நெல் மூட்டைகளை ஏற்றும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று சுமை தொழிலாளர்கள் ஓ.என்.ஜி.சி. குழாய்களை மேற்கண்ட இடத்தில் இருந்து அகற்றக்கோரி திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதில் சுமைதூக்கும் தொழிலாளர் சங்க தலைவர் மனோகரன், சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன், சுமைதூக்கும் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கஜேந்திரன், ஒன்றிய செயலாளர் லிங்கம் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதுகுறித்து தகவல் அறிந்ததும் நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் மற்றும் நன்னிலம் தாசில்தார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஓ.என்.ஜி.சி. குழாய்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதைடுத்து அவர்கள் சாலைமறியலை கைவிட்டனர். இதனால் அந்த பகுதியில் மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
---