

செஞ்சி,
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தினமும் இரவு நேர ஊரடங்கு (10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை) அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஞாயிற்றுக்கிழமையான இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனால் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. முக்கிய சாலைகள் அனைத்தும் வாகன போக்குவரத்து ஏதுமின்றி வெறிச்சோடி கிடந்தது. இரு மாவட்டத்திலும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது தேவையின்றி சுற்றித்திரிந்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, உடனடியாக வசூல் செய்யப்பட்டது.
வழக்குப்பதிவு- அபராதம்
விழுப்புரம் மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு பணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விழுப்புரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கையொட்டி 63 இடங்களில் போலீஸ்சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. இந்த பணிகளில் 1,300-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர். முக்கியமாக, புதுச்சேரி மாநில எல்லை பகுதிகள் அனைத்தும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. அது மட்டுமின்றி கடற்கரை பகுதிகளான கோட்டக்குப்பம், ஆரோவில், மரக்காணம் ஆகிய பகுதிகளில் மக்கள் கூடாமல் இருப்பதை கண்காணிக்கும் வகையில் போலீசார் மூலம் ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஊரடங்கை மீறி வீட்டைவிட்டு வெளியே வந்தவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் வசூலிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
செஞ்சிக்கோட்டை
செஞ்சியில் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரியதர்ஷிணி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஊர் சுற்றிய இளைஞர்களை போலீசார் எச்சரித்தனர். பொங்கல் பண்டிகையின் 3-ம் நாள் காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி செஞ்சிக்கோட்டையை காண உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளிமாவட்ட, வெளி மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வருவது வழக்கம். ஆனால் நேற்று முழு ஊரடங்கால் செஞ்சிக்கோட்டையும் மூடப்பட்டு இருந்தது. காணும்பொங்கல் அன்று களைகட்டி காணப்படும் செஞ்சிக்கோட்டை நேற்று களையிழந்து வெறிச்சோடி காணப்பட்டது.