

ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் சங்கர் தலைமை தாங்கினார். நடைபாதை சீரமைத்தல், உதவி தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மனு அளித்தனர். இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் சங்கர் உத்தரவிட்டார்.
இந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் குன்னூர் நகர பா.ஜனதா தலைவர் ராஜ்குமார், அமைப்புசாரா பிரிவு மாவட்ட தலைவர் மயில்சாமி ஆகியோர் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:
குன்னூர் வி.பி.தெருவில் சுப்பிமணயிர் கோவில், பெருமாள் கோவில், கருமாரியம்மன் கோவில் மற்றும் குடியிருப்புகள் உள்ளது. இந்த கோவில்களுக்கு மிக அருகில் அரசு டாஸ்மாக் மதுக்கடை இயங்கி வருகிறது. இந்த மதுக்கடையை மாற்றக்கோரி பலமுறை போராட்டம் நடத்தப்பட்டு, இதுவரை மாற்றப்படவில்லை. எனவே பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி இந்த டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
ஊட்டி அருகே உள்ள காணிக்கராஜ் நகர் பகுதியில் பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக உபதலை ஊராட்சி சார்பில் கிணறு அமைக்கப்பட்டது. இதன்மூலம் எங்களுக்கு தேவையான தண்ணீர் கிடைத்து வந்தது. இந்த நிலையில் இந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் அமைப்பு பொதுமக்களுக்கான குடிநீர் கிணற்றில் தனியார் மோட்டார் அமைத்து தண்ணீர் எடுத்து வருகிறது. இங்கு அந்த தனியார் அமைப்பு அதிகளவு தண்ணீர் எடுப்பதால் எங்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறப்பட்டு இருந்தது.