கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயி வலியுறுத்தல்

கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயி கூறினார்.
கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயி வலியுறுத்தல்
Published on

அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கி, விவசாயிகளிடமிருந்து குறைகளை கேட்டறிந்தார். கூட்டத்தில் காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் தங்க.தர்மராஜன் பேசுகையில், அரியலூர் மாவட்டத்தில் உள்ள டெல்டா பகுதிகளில் ஏரி, வரத்துவாய்க்கால்கள், குளங்களை தூர்வார மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டு வரும் நெல்லிற்கு முக்கியத்துவம் கொடுத்து அதிகபட்சமாக 2, 3 நாட்களில் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ஆங்காங்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்றார்.

தொடர்ந்து இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாநில செயலாளர் ராஜேந்திரன் பேசுகையில், திருச்சி- சிதம்பரம் சாலைக்கு நிலம் கையகப்படுத்தியதில் ஒரே கிராமத்தில் அருகருகே உள்ள நிலங்களுக்கு நிர்ணயம் செய்துள்ளது. விலை பாரபட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு உரிய விலை வழங்க வேண்டும். கூட்டுறவு சங்கத்தில் கரும்பு கடன் பெறும் விவசாயிகளுக்கு பயிர் பாதிப்பு ஏற்பட்டால் இழப்பீடு கிடைப்பதில்லை. பயிர் தீ விபத்தால் பாதிப்பு ஏற்படும் போதும் இழப்பீடு கிடைக்கவில்லை. இதில் உள்ள குளறுபடிகள் நீக்கப்பட வேண்டும். தட்கல் திட்டத்தில் பணம் கட்டிய விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க கால தாமதம் ஏற்படுவது தவிர்க்க வேண்டும் என்றார்.

மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் செங்கமுத்து பேசுகையில், அரசு செயல்படுத்தும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இரவு நேரத்தில் நெல் எடைபோடுவதை நிறுத்த வேண்டும். திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி செயல்பட்டு வரும் நிலையில் அரியலூர் மாவட்ட மக்களுக்கு 50 சதவீத விலை குறைப்பில் மணல் வழங்க வேண்டும். பயங்கர வாதிகளின் தாக்குதலில் வீரமரணம் அடைந்த சிவசந்திரனுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள புறவழிச்சாலை ரவுண்டானாவில் நினைவுத்தூண் அமைக்க வேண்டும் என்றார்.

தமிழக அம்பேத்கர் விவசாய இயக்க மாநில தலைவர் அம்பேத்கர் வழியன் பேசுகையில், புள்ளம்பாடி வாய்க்கால் பாசன வசதி கொண்ட காமரசவல்லி, குருவாடி, தூத்தூர், நானாங்கூர் உள்ளிட்ட பகுதிகளில் நெல் முற்றும் தருவாயில் தண்ணீர் இன்றி பயிர்கள் காய்ந்து வருகின்றன. எனவே, புள்ளம்பாடி வாய்க்காலில் தண்ணீர் திறக்க வேண்டும். அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் சேவை மையத்தில் கூடுதல் கணினியுடன் ஆட்கள் நியமிக்க வேண்டும் என்றார்.

கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு கலெக்டர் பதில் அளித்தார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி பொற்கொடி, வேளாண்மைத்துறை துணை இயக்குனர் (பொறுப்பு) பழனிசாமி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் அன்பு ராஜன் உள்பட அனைத்து துணை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com