குறைந்த வட்டிக்கு கடன் தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்தவர் கைது

குறைந்த வட்டிக்கு கடன் தருவதாக கூறி ஆயிரக்கணக்கானவர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
குறைந்த வட்டிக்கு கடன் தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்தவர் கைது
Published on

காரைக்கால்,

சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் செல்வம் (வயது 42). இவரது சொந்த ஊர் முசிறி முத்தாளம்பட்டி கிராமம் ஆகும். இவர் கடந்த 2015-ம் ஆண்டு காரைக்கால் இலைக்கார வீதியில் உள்ள ஒரு வீட்டின் மாடியை வாடகைக்கு எடுத்து நிதி நிறுவனம் நடத்தினார். அந்த நிறுவனத்தில் உறுப்பினராக சேர்ந்தவர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்குவதாக விளம்பரம் செய்தார்.

இதனை நம்பி இந்த நிறுவனத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் உறுப்பினர்களாக சேர்ந்தனர். அவர்களிடம் குறிப்பிட்ட தொகையை சந்தாவாக செல்வம் வசூலித்தார். சுமார் 6 மாத காலம் அந்த நிறுவனத்தை நடத்தி விட்டு செல்வம் தலைமறைவானார்.

இந்தநிலையில், காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறு பிடாரி கோவில் தெருவை சேர்ந்த மயில்வேலன் என்பவர், நேற்று முன்தினம் திருநள்ளாறு போலீசில் புகார் மனு அளித்தார். அதில், காரைக்காலில் நிதி நிறுவனம் நடத்தி வந்த செல்வம் என்பவர், குறைந்த வட்டியில் கடன் தருவதாகவும், அதற்கு குறிப்பிட்ட தொகையை செலுத்தி உறுப்பினராக சேர வேண்டும் என்றும் கூறினார்.

அதன்படி அவர் கூறிய தொகையை செலுத்தி உறுப்பினராக சேர்ந்தேன். மேலும் எனக்கு தெரிந்தவர்கள், நண்பர்கள், உறவினர்களையும் சேர்த்தேன். கடன் கேட்டபோது குறிப்பிட்ட தொகையை முன்பணமாக செலுத்த வேண்டும் என்று கூறினார். அதைத்தொடர்ந்து சுமார் 1 லட்சம் ரூபாய் வரை வசூலித்து அவரிடம் கொடுத்தேன். 6 மாதமாகியும் அவர் கடன் வழங்கவில்லை.

இதனால் குறைந்த வட்டியில் கடன் கொடுங்கள், இல்லாவிட்டால் கட்டிய பணத்தை திருப்பிக் கொடுங்கள் என்று கேட்டபோது ஏற்பாடு செய்வதாக கூறியவர், திடீரென்று நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவாகி விட்டார். அவரை பல இடங்களிலும் தேடியபோது தனது சொந்த ஊரான முசிறி முத்தாளம்பட்டி கிராமத்தில் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. அங்கு சென்று கேட்டபோது தனக்கு வெளியில் இருந்து பணம் வரவேண்டி இருப்பதாகவும், வந்த பிறகு திருப்பித் தருவதாகவும் கூறி ஏமாற்றுகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை திருப்பி பெற்றுத்தர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

புகாரை பெற்றுக் கொண்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் பிரவீண்குமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து தனிப்படை போலீசார் முசிறி சென்று செல்வத்தை கைது செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் மோசடி செய்ததை ஒப்புக் கொண்டார். அதைத்தொடர்ந்து திருநள்ளாறு அழைத்து வரப்பட்ட அவர், நேற்று மதியம் காரைக்கால் இரண்டாம் வகுப்பு குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

கைது செய்யப்பட்ட செல்வம், திருநள்ளாறில் மட்டும் சுமார் 350 பேர்களிடம் மோசடி செய்துள்ளதாகவும், ஒட்டுமொத்தமாக காரைக்கால் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார் என்றும் போலீசார் தெரிவித்தனர். அவரிடம் ஏமாந்தவர்கள் உடனடியாக போலீசில் புகார் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com