அகிலஇந்திய அளவில் கந்துவட்டி கொடுமையை தடுக்க, சட்டம் கொண்டு வர வேண்டும் தொல்.திருமாளவன் பேட்டி

கந்துவட்டி கொடுமையை தடுக்க, அகில்இந்திய அளவில் சட்டம் கொண்டு வர வேண்டும், என்று சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
அகிலஇந்திய அளவில் கந்துவட்டி கொடுமையை தடுக்க, சட்டம் கொண்டு வர வேண்டும் தொல்.திருமாளவன் பேட்டி
Published on

சேலம்,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சேலம் மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சேலம் திருவாக்கவுண்டனூர் பைபாஸ் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பங்கேற்க வந்த அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

பண மதிப்பிழப்பு நடவடிக்கை அமல்படுத்தி ஓராண்டு நிறைவானதை, வருகிற 8ந் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது. விமர்சனத்தை அரசியல் ரீதியாக அணுகாமல், தனிநபர் தாக்குதல் நடத்துவதை ஏற்க முடியாது. கரூர் மற்றும் மயிலாடுதுறையில் பா.ஜனதாவுக்கு ஆதரவாக செயல்பட்ட போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வந்த எங்களது கட்சியினரை கைது செய்துள்ளனர். நாகரீகம் கருதி அமைதியாக இருந்து வருகிறோம். அன்றைய தினம் பா.ஜ.க.வினர் நடத்திய வன்முறையை கண்டித்து வருகிற 3ந் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

கந்துவட்டி கொடுமையை தடுக்க, அகிலஇந்திய அளவில் சட்டம் கொண்டு வர வேண்டும். சென்னை, கோவை, மதுரையில் மாநகராட்சி தொழிலாளர்கள் கந்துவட்டி கொடுமையில் சிக்கியுள்ளனர். நெல்லையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து தனி நீதிபதி விசாரணை நடத்த வேண்டும். சர்க்கரை விலை உயர்வு முடிவை அரசு உடனடியாக கைவிட வேண்டும்.

டெங்குவை தடுக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததும், டெங்கு கட்டுக்குள் வராததற்கு ஒரு காரணம். எனவே, உடனடியாக உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். அரசியலில் ஈடுபடப்போவதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. கட்சி ஆரம்பித்து அவரது கொள்கை, கோட்பாடுகளை அறிவித்த பின்னரே இணைந்து செயல்படுவது குறித்து முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக சேலம் கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு போலீசாரிடம் அனுமதி பெறவில்லை. இதுபற்றி அறிந்த போலீசார் அங்கு வந்து, அனுமதி பெற்று நிகழ்ச்சியை நடத்துங்கள் என்று கூறினர்.

அப்போது, அங்கு காரில் தொல்.திருமாவளவன் வந்து இறங்கினார். பிறகு இந்த தகவல் அவரிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸ் அனுமதி பெற்று கொடியேற்றும் நிகழ்ச்சியை நடத்திக்கொள்ளலாம் என்று கட்சி நிர்வாகிகளிடம் தெரிவித்துவிட்டு அங்கிருந்து தொல்.திருமாவளவன் காரில் ஏறி சென்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com