திருக்காட்டுப்பள்ளி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற ஆசிரியர் பலி லாரி மோதியது
திருக்காட்டுப்பள்ளி,
திருக்காட்டுப்பள்ளியை அடுத்துள்ள வானராங்குடி காளியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் பழனி அய்யா(வயது50). இவர் புதுக்கோட்டை மாவட்டம் பூவை மாநகர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். தற்போது பூதலூர் என்.வி.நகரில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று காலை பழனி அய்யா மோட்டார் சைக்கிளில் வானராங்குடிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கூடணாணல் பகுதியில் சென்ற போது எதிரில் வந்த லாரி, மோட்டார் சைக்கிளின் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பழனிஅய்யாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பழனி அய்யா பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து பழனி அய்யாவின் மனைவி குறள்மணி கொடுத்த புகாரின் பேரில் திருக்காட்டுப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் ரெத்தினசாமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

