தேனி கலெக்டர் அலுவலகத்தில் தாய் – மகன் தீக்குளிக்க முயற்சி

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக தாய், மகன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி கலெக்டர் அலுவலகத்தில் தாய் – மகன் தீக்குளிக்க முயற்சி
Published on

தேனி கம்போஸ்ட் ஓடைத்தெருவை சேர்ந்த முருகன் மனைவி மாரியம்மாள். இவர் தனது மகன் சிவாவுடன் (வயது 19) தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்துக்கு மனு கொடுப்பதற்கு நேற்று காலை வந்தார். கலெக்டர் அலுவலக வளாகத்தில் திடீரென அவர்கள் இருவரும் தங்களின் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் நின்ற போலீசார் ஓடி வந்து, தீக்குளிக்க முயன்ற இருவரையும் தடுத்து நிறுத்தினர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மாரியம்மாள் கூறியதாவது:

எனக்கும், முருகனுக்கும் திருமணம் ஆகி 20 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். கடந்த 2013ம் ஆண்டில் எனது கணவர் வேறு திருமணம் செய்யப் போவதாகவும், என்னிடமும், எனது பிள்ளைகளிடமும் பத்திரத்தில் கையெழுத்து போட்டு தர வேண்டும் என்றும் கூறினார். அப்போது, எனது கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக தெரியவந்தது.

இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் அலுவலகம், தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையம், ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் ஆகிய இடங்களில் புகார்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் மனு அளித்தும் விசாரணை கூட நடத்தவில்லை. நான் கூலி வேலை செய்வதால், பிள்ளைகளை படிக்க வைக்க முடியாமல் தவிக்கிறேன். எனவே எங்களை கருணைக் கொலை செய்யுமாறு கலெக்டரிடம் மனு அளிக்கப் போகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து அவரை தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com