

கரூர்,
சோதனை
கரூரை அடுத்த செல்லாண்டிபாளையம் பகுதியில் என்ஜின்களுக்கு பயன்படுத்தப்பட்ட ஆயிலை வாங்கி அதை சுத்திகரித்து புதிய ஆயிலாக மாற்றி விற்பனை செய்து வருகின்றனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தோரணக்கல்பட்டி கிராம நிர்வாக அதிகாரி ஆறுமுகம், பசுபதிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் நேற்று முன்தினம் இரவு சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு 2 மினி வேன்களில் 19 பேரல்களில் சுத்திகரிக்கப்பட்ட ஆயில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பதை கண்டு பிடித்தனர்.
பின்னர் அங்கிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், இருவரும் டிரைவர் என்றும், ஒருவர் சென்னையை சேர்ந்த சந்திரசேகர்(வயது 28), மற்றொருவர் கரூரை சேர்ந்த ஆறுமுகம்(45) என்றும் கூறினர். மேலும் என்ஜின்களுக்கு பயன்படுத்தப்படும் ஆயிலை வாங்கி அதை சுத்திகரித்து புதிய ஆயிலாக டின்களில் அடைத்து விற்பனை செய்வதற்காக கொண்டு செல்ல தயாராக இருந்ததாகவும் கூறினர். இதைத்தொடர்ந்து டிரைவர்கள் 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 2 மினி வேன்களை, ஆயில் பேரலுடன் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த செயலில் ஈடுபட்டவர்கள் யார்? என்பது குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.