தடையை மீறி உண்ணாவிரதம் இருக்க முயன்ற மருந்தாளுனர்கள் 160 பேர் கைது

தடையை மீறி உண்ணாவிரதம் இருக்க முயன்ற மருந்தாளுனர்கள் 160 பேரை போலீசார் கைது செய்தனர்.
தடையை மீறி உண்ணாவிரதம் இருக்க முயன்ற மருந்தாளுனர்கள் 160 பேர் கைது
Published on

புதுக்கோட்டை,

மருந்தாளுனர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், 2 ஆயிரம் மினி கிளினிக்கள் மற்றும் நடமாடும் மருத்துவக்குழுக்களில் மருந்தாளுனர் பணியிடங்களை ஏற்படுத்திட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர் சங்கம் சார்பில் மாநில அளவிலான உண்ணாவிரத போராட்டம் புதுக்கோட்டையில் கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். உண்ணாவிரதத்தையொட்டி புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் அருகே டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் குருநாதன் (டவுன்) , கவுரி (திருக்கோகர்ணம்) மற்றும் போலீசார் நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் கலெக்டர் அலுவலகம் செல்லக்கூடிய சாலையில் இரும்பு தடுப்புகள் வைத்து அடைத்தனர். நேற்று பகலில் மழை பெய்துகொண்டிருந்ததால் கொட்டும் மழையிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் பல்வேறு இடங்களில் இருந்து வேன்களில் மருந்தாளுனர் சங்கத்தை சேர்ந்தவர்கள், புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் அருகே பி.எல்.ஏ. ரவுண்டானா அருகே குவிந்தனர். அவர்கள் மாநில தலைவர் சுப்ரமணியன் தலைமையில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். மேலும் பதாகைகளை பிடித்து கோஷமிட தொடங்கினர். அப்போது மாநில நிர்வாகிகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாகவும், மீறினால் கைது செய்யப்படுவீர்கள் என எச்சரித்தனர். இருப்பினும் தடையை மீறி போராட்டம் நடத்துவதாக கூறி சங்கத்தினர் கோஷம் எழுப்பினர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்து வேன் மற்றும் பஸ்சில் ஏற்றி அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். இதில் 55 பெண்கள் உள்பட 160 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். முன்னதாக உண்ணாவிரதத்திற்கு அனுமதி மறுத்ததால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால்பரபரப்பானது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com