2023-ம் ஆண்டு வரை மின்சாரம் உபரியாக இருக்கிறது ‘பெஸ்காம்’ நிர்வாக இயக்குனர் தகவல்

2023-ம் ஆண்டு வரை மின்சாரம் உபரியாக இருக்கிறது என்று ‘பெஸ்காம்’ நிர்வாக இயக்குனர் ஷிகா கூறினார்.
2023-ம் ஆண்டு வரை மின்சாரம் உபரியாக இருக்கிறது ‘பெஸ்காம்’ நிர்வாக இயக்குனர் தகவல்
Published on

பெங்களூரு,

2023-ம் ஆண்டு வரை மின்சாரம் உபரியாக இருக்கிறது என்று பெஸ்காம் நிர்வாக இயக்குனர் ஷிகா கூறினார்.

உபரி மின்சாரம்

கர்நாடக வணிக மற்றும் தொழில் வர்த்தக கூட்டமைப்பு சார்பில் நடந்த கூட்டத்தில் பெங்களூரு மின்வாரிய (பெஸ்காம்) நிர்வாக இயக்குனர் ஷிகா கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பெஸ்காம் மின்வாரியத்தில் கடந்த ஆண்டு முதல் உபரியாக மின்சாரம் உள்ளது. 2023-ம் ஆண்டு வரை மின்சாரம் உபரியாக இருக்கும். தற்போது மழை பெய்து வருகிறது. இதனால் குளிர்சாதன பெட்டிகள், ஏ.சி. மற்றும் பம்புசெட்டுகளின் மின்சார பயன்பாடுகள் குறைந்துள்ளன. இதன் மூலமும் குறிப்பிட்ட அளவு மின்சாரம் சேமிக்கப்படுகிறது.

இவ்வாறு சேமிக்கப்படும் மின்சாரம் மழைக்காலத்தில் மானியம் அல்லது சலுகை விலையில் தொழில் நிறுவனங்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மழைக்காலத்தில் மிச்சமாகும் மின்சாரத்தின் முழு பலனையும் பொதுமக்களுக்கு வழங்க முடியாத நிலை உருவாகி உள்ளதால் இந்த நிலைப்பாடு மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான கட்டண முறை அடுத்த ஆண்டு மின்கட்டணம் மாற்றி அமைக்கும்போது வெளியிடப்படும்.

மின்தடை ஏற்படாது

மின்சாரம் உபரியாக இருப்பதால் பெங்களூருவில் மின்தடை ஏற்படாது. மழை பெய்யும் வேளையில் மின்கம்பங்கள் சேதம் அடைகின்றன. இதனால் அவ்வப்போது பல்வேறு இடங்களில் அறிவிக்கப்படாத மின்தடை ஏற்படுகிறது. மின்தடைக்கு பராமரிப்பு பணியும் ஒரு காரணமாக உள்ளது. இதை சரிசெய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதாவது பெங்களூருவில் பூமிக்கடியில் மின்வயர்களை பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த பணி 3 ஆண்டுகளில் முடிவடையும். மேலும் மின்கட்டணம் செலுத்தும் முறையை மாற்றும் திட்டம் உள்ளது. அதுபற்றி தகவல் விரைவில் வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com