வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள ஓட்டேரி ஏரிக்கு 3 ஆயிரம் பறவைகள் வருகை
வண்டலூர்,
சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவுக்குள் ஓட்டேரி ஏரி உள்ளது. சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் எப்போதும் தண்ணீர் இருப்பதால் பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான பறவைகள் தற்போது வரை இந்த ஏரிக்கு வந்து செல்கிறது.
காலை மற்றும் மாலை நேரங்களில் ஏரியின் நடுவே உள்ள மரத்தில் பறவைகள் அதிக அளவில் அமர்ந்து இருக்கிறது. பூங்காவுக்கு வரும் பார்வையாளர்கள் அதிகளவில் இந்த ஏரிக்கு சென்று பறவைகளை பார்த்து ரசித்து செல்கின்றனர். பார்வையாளர்கள் ஏரியில் அமைக்கப்பட்டு உள்ள உயர் கோபுரத்தின் மீது ஏறி தொலைநோக்கி மூலம் பறவைகளை பார்த்து ரசிக்கின்றனர்.
கடந்த 25 மற்றும் 26ந் தேதிகளில் ஓட்டேரி ஏரியில் உள்ள பறவைகளை கணக்கெடுக்கும் பணியில் பூங்கா அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபட்டனர். இதில் கூழைக்கடா, சாம்பல்நாரை, செந்நாரை, வெட்டியான், பாம்புதாரா, கரடிவாயன் உள்பட 16 வகையான பறவைகள் அதிகளவில் இருப்பது தெரியவந்தது.
இதில் ஆஸ்திரேலியா, இலங்கை உள்பட பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமான பறவைகளும் இங்கு வந்து தங்கி இருப்பது தெரியவந்தது. தற்போது எடுத்த கணக்கெடுப்பின்படி 3 ஆயிரத்து 300 பறவைகள் இங்கு வந்து செல்கிறது.
இது குறித்து பூங்கா அதிகாரி ஒருவர் கூறும்போது, சுட்டெரிக்கும் வெயில் காலத்தில் வண்டலூர் பூங்காவில் உள்ள ஏரியில் ஏராளமான பறவைகள் வருவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கு கூட அதிகளவில் பறவைகள் தற்போது செல்லவில்லை. ஆனால் வண்டலூர் பூங்காவுக்குள் உள்ள ஏரிக்கு பறவைகள் வருகை அதிகரித்து உள்ளது. இந்த ஏரியில் தண்ணீர் அதிகளவில் காணப்படுகிறது. பறவைகள் தங்குவதற்கு ஏற்ப ஏரியின் நடுவே அதிகளவில் மரங்கள் உள்ளது. வரலாறு காணாத அளவுக்கு சமீபத்தில் வார்தா புயலால் வண்டலூர் பூங்கா பாதிப்பு அடைந்து பல ஆயிரக்கணக்கான மரங்கள் விழுந்த நிலையில் கூட ஓட்டேரி ஏரிக்கு அதிகளவில் பறவைகள் வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

