

மும்பை,
மும்பை, கோவாவில் உள்ள விஜய் மல்லையாவின் சொத்துகளை ஏலம் விடும் முயற்சி மீண்டும் தோல்வியில் முடிந்தது.
பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தவில்லை. பணத்தை திருப்பிக்கேட்டு வங்கிகள் தீவிர நடவடிக்கைகளில் இறங்கியதும், அவர் இங்கிலாந்துக்கு தப்பி ஓடிவிட்டார். அவரை இந்தியா கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது.
இந்தநிலையில், அவருக்கு கடன் கொடுத்த 17 வங்கிகள் அவரது சொத்துகளை ஏலத்தில் விட்டு பணத்தை திரட்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
இதன்படி மும்பையில் உள்ள கிங்க்பிஷர் ஹவுஸ் இதற்கு முன் 3 முறையும், கோவாவில் உள்ள கோவா வில்லா பங்களா வீடும் 2 முறையும் ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டன. ஆனால் இந்த சொத்துக்களை ஏலத்தில் வாங்க யாரும் முன்வரவில்லை.
மும்பையில் உள்ள கிங்பிஷர் ஹவுஸ் முதல் முறையாக ஏலத்திற்கு வந்தபோது ரூ.150 கோடி விலை நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அதன்பின்னர் அடுத்தடுத்து விலை குறைக்கப்பட்டு 3 முறை ஏலத்திற்கு வந்த பின்னர் யாரும் விலைக்கு வாங்க முன்வரவில்லை.
இதேபோல கோவாவில் உள்ள கிங்பிஷர் வில்லா பங்களா வீட்டை ஏலத்திற்கு கொண்டு வந்த 2 முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.
இந்தநிலையில், 2 சொத்துகளும் நேற்று ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டன. இதில் மும்பை கிங்பிஷர் ஹவுஸ் ரூ.103.5 கோடி விலை நிர்ணயிக்கப்பட்டு 4வது முறையாகவும், கோவா வில்லா பங்களா வீடு ரூ.73 கோடி என விலை நிர்ணயிக்கப்பட்டு 3வது முறையாகவும் நேற்று மீண்டும் ஏலம் விடப்பட்டன. இந்த அளவுக்கு விலை குறைக்கப்பட்ட போதும் அவற்றை ஏலம் எடுக்க யாரும் முன்வரவில்லை.
இதன் காரணமாக விஜய் மல்லையாவின் வீடுகளை ஏலத்திற்கு விடும் வங்கி கூட்டமைப்புகளின் முயற்சி மீண்டும் தோல்வியை தழுவி உள்ளது.