

திருவண்ணாமலை
திருவண்ணாமலை அருகே சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிப்காட் அமைக்க எதிர்ப்பு
திருவண்ணாமலை அருகே உள்ள பாலியப்பட்டு கிராமத்தில் சிப்காட் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக அதிகாரிகள் மூலம் பார்வையிடப்பட்டது.
தங்கள் பகுதியில் சிப்காட் அமைக்கக்கூடாது என்று கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம், மனித சங்கிலி, மனு கொடுக்கும் போராட்டம் என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கிராம மக்கள் சார்பில் 100-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இத்தனை நாட்களாக போராட்டம் நடத்தியும் அதிகாரிகள் யாரும் தங்களை நேரில் வந்து பார்க்கவில்லை என்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளிடம் கோரிக்கை மனுவுடன் சீர்வரிசை வழங்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு பா.ம.க. ஒன்றிய கவுன்சிலர் குட்டி தலைமை தாங்கினார். கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள அறிவியல் பூங்கா எதிரில் இருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை 100-க்கும் மேற்பட்ட மக்கள் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பியப்படி ஊர்வலமாக வந்தனர்.
அப்போது அவர்கள் பாலியப்பட்டு பகுதியில் விளைந்த காய்கறி, பூ, நெல், மணிலா போன்றவற்றை தட்டில் சீர்வரிசை கொண்டு வருவது போன்று ஊர்வலமாக வந்தனர்.
100 நாட்களாக...
கலெக்டர் அலுவலகம் நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது போலீசார், கோரிக்கை மனுவை மட்டும் எடுத்து செல்லுங்கள் மற்ற பொருட்கள் கொண்டு செல்லக்கூடாது என்றும், குறிப்பிட்ட நபர்கள் மட்டும் செல்ல வேண்டும் என்றனர்.
இதனால் கிராம மக்கள் நுழைவு வாயில் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களை போலீசார் கலெக்டர் அலுவலகத்திற்குள் செல்ல அனுமதித்தனர்.
அதைத் தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி நேரில் வந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார்.
அப்போது அவர்கள், 100 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம். அதிகாரிகள் யாரும் எங்களை வந்து பார்க்கவில்லை. கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தும் எந்தவித பதிலும் வரவில்லை. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
மேலும் விவசாயிகள் சீர்வரிசையாக கொண்டு வந்த காய்கறி, பூ, நெல் உள்ளிட்ட பொருட்களை அவரிடம் வழங்கினர். அதனை அவர் பெற்றுக்கெண்டார். ஆனால் அவை கலெக்டர் அலுவலக வாசலிலேயே வைக்கப்பட்டது.
இந்த போராட்டத்தினால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.