குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி காலிக்குடங்களுடன் திரண்டு வந்த பெண்கள் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி இரு கிராமங்களை சேர்ந்த பெண்கள் காலிக்குடங்களுடன்
குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி காலிக்குடங்களுடன் திரண்டு வந்த பெண்கள் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
Published on

நாமக்கல்,

புதுச்சத்திரம் ஒன்றியம் தத்தாதிரிபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஓலப்பாளையம் பகுதியை சேர்ந்த பெண்கள் நேற்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு காலிக்குடங்களுடன் வந்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஆசியா மரியத்திடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். பின்னர் அவர்கள் கூறியதாவது:

ஓலப்பாளையம் பகுதியில் 70 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதிக்கு காவிரி குடிநீர் வாரம் இருமுறை வினியோகம் செய்யப்பட்டு வந்தது. மேலும் கிராமத்தில் உள்ள ஆழ்துளை கிணறு மூலமும் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது. ஆனால் கடந்த 1 மாத காலமாக காவிரி குடிநீர் வருவது இல்லை. இதேபோல் ஆழ்துளை கிணறுகளும் வற்றிவிட்டதால் ஒரு மாத காலமாக அவற்றின் மூலமும் தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை. எனவே நாங்கள் ஒரு குடம் தண்ணீரை ரூ.6க்கு வாங்கி பயன்படுத்தி வருகிறோம். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எங்கள் பகுதிக்கு சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதேபோல் பிள்ளாநத்தம் ஊராட்சி பீ.மேட்டுபாளையம் ஆதிதிராவிடர் தெரு மற்றும் பனங்காட்டுவலவு பகுதியை சேர்ந்த பொதுமக்களும் கலெக்டர் அலுவலகத்திற்கு காலிக்குடங்களுடன் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: எங்கள் பகுதிக்கு கடந்த 2 மாதகாலமாக குடிநீர் சரியாக வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் ஒரு மைல் தூரம் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டிய சூழ்நிலை உள்ளது. இது தொடர்பாக ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எங்கள் பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறுகளை சீரமைத்து தங்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தனர்.

குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி பெண்கள் காலிக்குடங்களுடன் திரண்டு வந்ததால் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com