

அணைக்கட்டு
ஒடுகத்தூர் அருகே மோட்டார்சைக்கிளில் வேகமாக சென்றவர்களை கண்டித்ததால் இருதரப்பினரிடையே பயங்கர கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் தெருவிளக்குகள் அடித்து நொறுக்கப்பட்டதால் பதற்றம் உருவானது.
ஒரே மோட்டார்சைக்கிளில்...
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூரை அடுத்த அகரம்புதுமனை பகுதியைச் சேர்ந்தவர்கள் சுப்பிரமணி மகன் ரீனா (வயது 23), அவரது அண்ணன் சுபாஷ் (25), சக்கர குமார் என்பவரது மகன் அருள் (23), மணி மகன் ரமணன் (19). இவர்கள் 4 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் மாலை எடத்தெரு என்ற கிராம பகுதியில் வேகமாக ஓட்டிச்சென்று உள்ளனர்.
அப்போது அங்கு நின்றிருந்த வரதன் மகன் சரவணன் (41) அவர்களை தட்டிக் கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது மோட்டார் சைக்கிளில் சென்ற 4 பேரும் ஆத்திரமடைந்து சரவணனை தாக்கினர்.
பொதுமக்கள் தாக்குதல்
இதைப்பார்த்த எடத்தெரு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ரமணன் உள்ளிட்ட 4 பேரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் ரமணன் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனமதிக்கப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்தவுடன் அகரம் புதுமனை பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கொதிப்படைந்தனர். அவர்களில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் எடத்தெரு பகுதிக்கு வந்து அங்குள்ள பகுதி மக்களை தாக்க முயன்றனர். அந்த பகுதியே போர்க்களமாக மாறும் நிலை ஏற்பட்டதால் பதற்ணுறம் உருவானது. 50-க்கும் மேற்பட்டோர் சாலைகளில் இருந்த மின் விளக்குகளை அடித்து நொறுக்கினர்.
கட்டுக்குள் கொண்டு வர...
தகவல் அறிந்த வேப்பங்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக எடத்தெரு பகுதியைச் சேர்ந்த சரவணன் கொடுத்த புகாரின் பேரில் அகரம் பகுதியைச் சேர்ந்த ரீனா சுபாஷ், அருள், முகுந்தன் (19) மற்றும் ரமணன் ஆகிய 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் அகரம்பகுதியை சேர்ந்த ரமணன் கொடுத்த புகாரின்பேரில் எடத்தெரு பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் வெங்கடேசன் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.