கள்ளக்காதல் தகராறில் இரும்பு கம்பியால் தாக்கப்பட்ட வாலிபர், சிகிச்சை பலன் இன்றி சாவு

கள்ளக்காதல் தகராறில் இரும்பு கம்பியால் தாக்கப்பட்ட வாலிபர், சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார்.
கள்ளக்காதல் தகராறில் இரும்பு கம்பியால் தாக்கப்பட்ட வாலிபர், சிகிச்சை பலன் இன்றி சாவு
Published on

செங்குன்றம்,

செங்குன்றத்தை அடுத்த சென்றம்பாக்கம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அரிகுமார்(வயது 26). தேசிய அளவிலான கால்பந்து வீரர். இவர், மணலியில் உள்ள மத்திய அரசு நிறுவனமான சி.பி.சி.எல்.லில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

கடந்த 25-ந்தேதி இவர், வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். கட்டிட வேலைக்கு சென்று இருந்த அவருடைய தாயார் சகுந்தலா, மாலையில் வீட்டுக்கு வந்தபோது அரிகுமார் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியபடி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

கள்ளக்காதல்

பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அரிகுமாரை மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இதுபற்றி செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேந்தர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

அதில், கள்ளக்காதல் தகராறில் அரிகுமார் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டது தெரிந்தது. இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த பெயிண்டர் அற்புதராஜ் (38) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவருடைய உறவினரை போலீசார் தேடி வந்தனர்.

உயிரிழந்தார்

இந்தநிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி நேற்று முன்தினம் இரவு அரிகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து போலீசார், இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த அற்புதராஜின் உறவினர் வசீந்தர்(19) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

கைதான அற்புதராஜ் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், எனது மனைவியுடனான கள்ளக்காதலை கைவிடுமாறு பலமுறை அரிகுமாரை எச்சரித்தேன். ஆனால் அவர் கைவிடவில்லை. மீண்டும், மீண்டும் எனது மனைவியுடன் பேசி வந்தார். சம்பவத்தன்று எனது மனைவி, செல்போனில் யாருடனோ பேசிக்கொண்டு இருந்தாள். அவளிடம் இருந்து செல்போனை வாங்கி பார்த்த போது அதில் அரிகுமாரின் செல்போன் எண் என்பது இருந்தது. நான் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் எனது மனைவியுடன் அவர் தொடர்ந்து பேசி வந்ததால் ஆத்திரம் அடைந்த நான், எனது உறவினர் வசீந்தருடன் அரிகுமார் வீட்டுக்கு சென்று அவரை இரும்பு கம்பியால் தாக்கினேன். அவர் இறந்து விட்டதாக நினைத்து தப்பி ஓடிவிட்டோம் என்று கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com