திண்டுக்கல்லில் இருந்து மது வாங்கி வந்த 2 பேர் கைது


திண்டுக்கல்லில் இருந்து மது வாங்கி வந்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 17 Jun 2021 6:55 PM GMT (Updated: 17 Jun 2021 6:55 PM GMT)

திண்டுக்கல்லில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து 300 மதுபாட்டில்கள், கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பொள்ளாச்சி

திண்டுக்கல்லில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து 300 மதுபாட்டில்கள், கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ரகசிய தகவல் 

கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால், டாஸ்மாக் கடைகள் திறக்கவில்லை. ஆனால் தொற்று குறைவாக உள்ள திண்டுக்கல் உள்பட 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. 

இதனால் பொள்ளாச்சி மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த பலர் திண்டுக்கல்லுக்கு வாகனங்களில் சென்று அதிகளவில் மதுபானங்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

மதுபாட்டில்கள் பறிமுதல் 

இதையடுத்து மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சின்னகாமணன் மற்றும் போலீசார் கோவை ரோடு சி.டி.சி. காலனியில் வாகன சோதனையில் ஈடுபட்ட னர். 

அப்போது அந்த வழியாக வந்த கேரள பதிவு எண் வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காருக்குள் ஏராளமான மதுபாட்டில்கள் இருப்பது தெரிய வந்தது. 

இதையடுத்து காருக்குள் இருந்தவரிடம் போலீசார் விசாரணை செய்தபோது, கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள நெய்தலையை சேர்ந்த பாலாஜி (வயது 26) என்பதும், கூடுதல் விலைக்கு விற்க கேரளாவுக்கு கொண்டு செல்வதும் தெரியவந்தது. 

இதையடுத்து போலீசார் பாலாஜியை கைது செய்ததுடன், அவர் வந்த கார் மற்றும் காருக்குள் இருந்த 237 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். 

ஆழியாறு

இதேபோன்று பொள்ளாச்சி அருகே ரெட்டியாரூர் சோதனை சாவடியில் ஆழியாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அந்த காரை ஓட்டி வந்த அங்கலகுறிச்சியை சேர்ந்த தங்கதுரை (40) என்பவரிடம் விசாரணை செய்தபோது, திண்டுக்கல்லில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி வந்து கூடுதலை விலைக்கு விற்க கொண்டு சென்றது தெரியவந்தது. 

இதையடுத்து போலீசார் தங்கதுரையை கைது செய்ததுடன், அவரிடம் இருந்து 63 மதுபாட்டில் கள் மற்றும் காரும் பறிமுதல் செய்யப்பட்டது. 


Next Story