அனுமதியின்றி வீட்டில் பட்டாசு தயாரித்த போது வெடிவிபத்து; ஒருவர் சாவு


அனுமதியின்றி வீட்டில் பட்டாசு தயாரித்த போது  வெடிவிபத்து; ஒருவர் சாவு
x
தினத்தந்தி 10 Sep 2021 8:50 PM GMT (Updated: 10 Sep 2021 8:50 PM GMT)

சிவகாசி அருகே அனுமதியின்றி வீட்டில் பட்டாசு தயாரித்த போது ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் பலியானார். பெண்கள் உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

தாயில்பட்டி, 
சிவகாசி அருகே அனுமதியின்றி வீட்டில் பட்டாசு தயாரித்த போது ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் பலியானார். பெண்கள் உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர்.  
தொழிலாளி பலி 
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி ஊராட்சியை சேர்ந்த எஸ்.பி.எம்.தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 30). இவரது வீட்டில் ஆட்களை வைத்து அனுமதியின்றி பட்டாசு தயாரித்து வந்துள்ளார். இந்த பணியில் 15-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டனர். 
நேற்று காலை 10 மணி அளவில் வீட்டில் வழக்கம் போல் பட்டாசுக்கான மருந்து கலக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர். அப்போது சண்முகராஜ் (52) என்பவர் நின்றிருந்த பகுதியில் திடீரென கலவை மருந்து வெடித்து சிதறியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 
படுகாயம் 
மேலும் இந்த வெடிவிபத்தில் எஸ்.பி.எம். தெருவை சேர்ந்த ராஜீவ்காந்தி மனைவி செல்வமேரி (40), முத்துராஜ் (45), மாரீஸ்வரன் மனைவி சுகந்தி (24) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களையும் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் 3 பேரும் மேல் சிகிச்சைக்காக  மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 
மேலும் இந்த சம்பவத்தில் கலைஞர் காலனியை சேர்ந்த சக்தி மனைவி முத்துமாரி (28), மூக்கையா மனைவி முத்துச்செல்வி (35), ராஜீவ்காந்தி மனைவி செல்வி (35), சீதாலட்சுமி (38), பாலமுருகன் (30) ஆகியோரும் காயம் அடைந்தனர். இவர்கள் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 
தரை மட்டமான அறை 
பட்டாசு விபத்து குறித்து தகவல் அறிந்த சிவகாசி, வெம்பக்கோட்டை தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் பணி நடந்து கொண்டு இருந்த அறை முற்றிலும் இடிந்து தரை மட்டமானது. அருகிலிருந்த திருப்பதி என்பவரது வீடும் சேதமானது. 
விருதுநகர் போலீஸ் சூப்பிரண்டு மனோகரன், சாத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன், வெம்பக்கோட்டை இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன், சிவகாசி தாசில்தார் ராஜ்குமார், தாயில்பட்டி வருவாய் அலுவலர் சாரதாதேவி, கிராம நிர்வாக அலுவலர் ரவி ராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர். 
இதுெதாடர்பாக போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் நிருபர்களிடம் கூறியதாவது:- 
தாயில்பட்டி ஊராட்சியை சேர்ந்த கலைஞர் காலனியில் கடந்த ஜூன் மாதம் அனுமதியின்றி பட்டாசு தயாரித்த போது வெடிவிபத்து ஏற்பட்டு 4 பேர் பலியாகினர். இதையடுத்து சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பதை தடுப்பதற்காகவும், பட்டாசு விபத்து நடைபெறாமல் தடுப்பதற்காகவும், 5 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தொடர்ந்து சோதனை செய்யப்பட்டு வருகிறது. அதற்கு கிராம மக்கள் முழுமையாக ஒத்துழைப்பு தர வேண்டும். சிலர் செய்யும் தவறினால் அருகிலுள்ள குடும்பத்தாரும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கப்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களை மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.  இவ்வாறு அவர் கூறினார். 
8 பேர் மீது வழக்கு 
வெடிவிபத்து குறித்து தாயில்பட்டி கிராம நிர்வாக அலுவலர் ரவிராஜ் அளித்த புகாரின் பேரில் வெம்பக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக பாலமுருகன் (30), செல்வி (35), முத்துச்செல்வி (35), செல்வமேரி (40), முத்து முனீசுவரி (28), சுகந்தி (24), சீதாலட்சுமி (38), முத்துராஜ் (45) ஆகிய 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்ணா போராட்டம்
பட்டாசு வெடி விபத்து நடந்த இடத்தை சாத்தூர் எம்.எல்.ஏ. ரகுராமன் நேரில் பார்வையிட்டார். பின்பு போலீசாரிடம் வழக்குப்பதிவு குறித்து விசாரித்தார். முழுமையான பதில் கிடைக்காததால் பட்டாசு விபத்து நடந்த இடத்தில் தரையில் அமர்ந்து எம்.எல்.ஏ. ரகுராமன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது  இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன் எம்.எல்.ஏ. ரகுராமனிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றார். அப்போது தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயபாண்டியன், தாயில்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சந்தானம், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ரவி சங்கர், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் தாமோதரக்கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story