மீன்பிடிக்க சென்ற போது ஏரியில் மூழ்கிய தொழிலாளி சாவு


மீன்பிடிக்க சென்ற போது ஏரியில் மூழ்கிய தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 15 Jan 2022 12:15 PM GMT (Updated: 15 Jan 2022 12:15 PM GMT)

பாக்கம் ஏரியில் நண்பர்களுடன் மீன்பிடித்த தொழிலாளி நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். அவரது உடலை தேசிய பேரிடர் மீட்பு படையினர் 40 மணி நேரம் கழித்து மீட்டனர்.

குடியாத்தம்

பாக்கம் ஏரியில் நண்பர்களுடன் மீன்பிடித்த தொழிலாளி நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். அவரது உடலை தேசிய பேரிடர் மீட்பு படையினர் 40 மணி நேரம் கழித்து மீட்டனர்.

ஏரி நிரம்பியது

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரோஸ் குமார் (வயது 40). தேங்காய் உரிக்கும் தொழிலாளி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர்களின் கிராமத்தில் உள்ள பாக்கம் ஏரி நிரம்பியது.

இதனால் பாக்கம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த இளைஞர்களும் பொதுமக்களும் ஏரியில் மீன் பிடித்து வந்தனர். பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் ஏரியில் மீன் பிடிக்க வலைவீசி உள்ளனர். அவர்களுடன் ரோஸ் குமாரும் செல்வது வழக்கம்.

வியாழக்கிழமை காலையில் வழக்கம்போல் பாக்கம் ஏரியில் வலைவீசினர். மாலை 4 மணியளயில் வலையில் மீன் சிக்கியுள்ளதா என ரோஸ்குமார் ஏரியில் இறங்கி உள்ளார். வெகுநேரம் ஆகியும் அவர் கரை திரும்பவில்லை.

அதனால் கரை மேல் இருந்த அவரது கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

தகவல் அறிந்த பேரணாம்பட்டு, குடியாத்தம் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து கிராம மக்கள் உதவியுடன் பாக்கம் ஏரியில் அன்று இரவு சுமார் 7 மணி வரை தேடினர். அதன்பின் இருளாக இருந்ததால் அவர்கள் தேடும் பணியை கைவிட்டனர்.
நேற்றுமுன்தினம் காலையில் மீண்டும் தீயணைப்பு வீரர்கள் பாக்கம் ஏரியில் இறங்கி ரோஸ் குமாரின் உடலை தேடினர். பல மணி நேரம் தேடியும் கிடைக்காததால் ஏரியில் பல அடி ஆழம் இருப்பதாலும் ஏரி நிரம்பி உள்ளதாலும் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவின் பேரில் அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படையினர் அழைக்கப்பட்டனர்.

படகுகளில் தேடினர்

நேற்றுமுன்தினம் மாலையில் குடியாத்தம் வந்த தேசிய பேரிடர் மீட்புப் படையின் கமாண்டர் சுரேஷ் சக்காரியா தலைமையில் 15 பேர் இரண்டு பைபர் படகுகளில் பாக்கம் ஏரியில் இறங்கி தேடினர்.மேலும் இரவு ஆகிவிட்டதால் மீட்புக்குழுவினர் திரும்பினர்.
நேற்று காலையில் மீண்டும் பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவினர் பாக்கம் ஏரியில் இறங்கி மீட்பு பணியில் ஈடுபட்டனர் காலை சுமார் 7.45 மணி அளவில் 40 மணி நேரத்திற்குப் பின் ரோஸ் குமாரின் உடலை அவர்கள் மீட்டனர்.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பரதராமி போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story