சித்ரா பவுர்ணமிக்கு கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு அனுமதி

திருவண்ணாமலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு சித்ரா பவுர்ணமிக்கு கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க 40 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
சித்ரா பவுர்ணமிக்கு கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு அனுமதி
Published on

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு சித்ரா பவுர்ணமிக்கு கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க 40 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

சித்ரா பவுர்ணமி

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது.

மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவிலின் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் தூரம் பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

கார்த்திகை தீப திருவிழாவின் போது 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வார்கள். அதற்கு அடுத்தபடியாக சித்ரா பவுர்ணமி தினத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்து கிரிவலம் செல்வார்கள்.

இவ்வாறு வெகுசிறப்பாக நடைபெறும் சித்ரா பவுர்ணமி கிரிவலத்திற்கு கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அனைத்து நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருவதால் 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமிக்கு கிரிவலம் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

இதற்கான முன்னேற்பாடு பணிகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆண்டிற்கான சித்ரா பவுர்ணமி வருகிற 15 மற்றும் 16-ந் தேதிகளில் வருகிறது. இதில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்ல வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

40 இடங்கள் தேர்வு

இந்த கிரிவலத்தின் போது தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் சார்பில் அன்னதானம் அளிக்க மாவட்ட நிர்வாகத்தால் 40 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

எனவே அன்னதானம் செய்ய விரும்பவர்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 40 இடங்களில் மட்டுமே அன்னதானம் செய்ய அனுமதி அளிக்கப்படும்.

அன்னதானம் அளிக்க விரும்புபவர்கள் வருகிற 14-ந் தேதிக்குள் (வியாழக்கிழமை) https://foscos.fssai.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து அனுமதி ஆணை பெற வேண்டும்.

மேலும் பாஸ்போர்ட் அளவுள்ள 3 புகைப்படங்கள், முகவரிக்கான ஆதார் உள்ளிட்ட ஏதேனும் ஒரு சான்றின் நகல் ஆகியவற்றுடன் திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் வருகிற 10-ந் தேதியை தவிர்த்து 14-ந் தேதி வரை நேரில் வந்து விண்ணப்பிக்கலாம்.

14-ந் தேதிக்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் எந்த காரணத்தை முன்னிட்டும் ஏற்றுக் கொள்ளப்படாது. அனுமதி ஆணையில் குறிப்பிட்டுள்ள தேதி, நேரம் மற்றும் இடத்தில் மட்டுமே அன்னதானம் வழங்க அனுமதி அளிக்கப்படும்.

எந்த காரணத்தை முன்னிட்டும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது. அன்னதானம் வழங்க இலையால் ஆன தென்னை மற்றும் பாக்கு மட்டை பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

காவல்துறை மூலம் நடவடிக்கை

குப்பைக்கூடைகளை அன்னதானம் அளிப்பவர்களே எடுத்து வர வேண்டும். அன்னதானம் செய்யும் இடங்களில் விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பது குறித்து உணவு பாதுகாப்பு துறை, வருவாய்த்துறை, காவல் துறை மற்றும் உள்ளாட்சி துறை பணியாளர்களால் அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

அன்னதானம் முடிந்தவுடன் அந்த இடத்தினை முழுமையாக சுத்தம் செய்த பின்னரே செல்ல வேண்டும்.

அதற்கு ஏற்றவாறு நபர்களை உடன் அழைத்து வர வேண்டும். உரிய அனுமதி இல்லாமல் அன்னதானம் அளிப்பவர்கள் மற்றும் அனுமதி அளிக்கப்பட்ட இடம் தவிர வேறு இடங்களில் அன்னதானம் அளிப்பவர்கள் மீது காவல் துறை மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இந்த தகவலை கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com