திருப்பூரில் இருந்து அசாம், பீகார், உத்தரபிரதேசத்திற்கு 3 சிறப்பு ரெயில்களில் 4,800 தொழிலாளர்கள் பயணம்

திருப்பூரில் இருந்து அசாம், பீகார், உத்தரபிரதேசத்திற்கு 3 சிறப்பு ரெயில்கள் நேற்று இயக்கப்பட்டது. இதில் 4 ஆயிரத்து 800 தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டனர்.
திருப்பூரில் இருந்து அசாம், பீகார், உத்தரபிரதேசத்திற்கு 3 சிறப்பு ரெயில்களில் 4,800 தொழிலாளர்கள் பயணம்
Published on

திருப்பூர்,

திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இதில் தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 6 லட்சம். வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் 2 லட்சம். கொரோனா பாதிப்பின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு விதிக்கப்பப்டுள்ளது.

இந்த ஊரடங்கின் வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வந்து கொண்டிருந்தனர்.

மேலும், பலர் உணவுகளும் கிடைக்காமல் சிரமத்தை சந்தித்து வந்தார்கள்.தங்களை சொந்த ஊருக்கு அனுப்பிவைக்க வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் வடமாநில தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது.

இதனைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை நிறுவனங்கள் உள்பட பல்வேறு நிறுவனங்களில் வேலை செய்து வருகிற வடமாநில தொழிலாளர்களில் சொந்த ஊர்களுக்கு செல்ல விருப்பம் உள்ளவர்கள், வருவாய்த்துறை அதிகாரிகளிடம் செல்போன் எண் மற்றும் ஆதார் எண்ணை கொடுத்து பதிவு செய்து வருகிறார்கள். அதன்படி பல்வேறு கட்டங்களாக சிறப்பு ரெயில்களில் தொழிலாளர்கள் அனுப்பிவைக்கப்பட்டு வருகிறார்கள்.

4,800 பேர்

இந்த நிலையில் திருப்பூரில் இருந்து நேற்று அசாம் மாநிலம் திப்ரூகார்க் பகுதிக்கு மதியம் 1 மணிக்கும், பீகார் மாநிலம் ஹஜ்பூருக்கு மாலை 4 மணிக்கும், உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூருக்கு இரவு 8 மணிக்கும் என 3 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. இதில் ஒரு ரெயிலில் 1,600 பேர் என 3 ரெயில்களில் மொத்தம் 4,800 தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்தனர்.

முன்னதாக இதில் பயணம் செய்ய வந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து அவர்களுக்கு உணவு, தண்ணீர் பாட்டில் போன்றவைகளும் வழங்கப்பட்டது. பதிவு எண் படி ஒவ்வொருவரும் தனித்தனியாக அந்தந்த இடங்களில் அமரவைத்து சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.


17 சிறப்பு ரெயில்கள்

இதற்கிடையே ஊத்துக்குளி மண்ணரை பகுதியில் உள்ள பள்ளியில் டோக்கன் பெறுவதற்காக வடமாநில தொழிலாளர்கள் குவிந்தனர். சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் காத்துநின்று டோக்கன் பெற்று, ரெயிலில் பயணம் செய்தனர். இதன் காரணமாக அந்த பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூரில் இருந்து இதுவரை வடமாநில தொழிலாளர்களுக்காக மொத்தம் இதுவரை 17 சிறப்பு ரெயில்கள் பல்வேறு மாநிலங்களுக்கு இயக்கப்பட்டுள்ளன. இந்த ரெயில்களிலும் இதுவரை 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயணம் செய்துள்ளனர். இதுபோல் தனியார் பஸ்கள் மற்றும் நிறுவன பஸ்களிலும் பலர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com