வாகனம் மோதி பள்ளி மாணவன் பலி

தென்காசி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பள்ளி மாணவன் பரிதாபமாக பலியானார்.
வாகனம் மோதி பள்ளி மாணவன் பலி
Published on

அச்சன்புதூர்:

தென்காசி அருகே உள்ள கொடிக்குறிச்சி பார்வதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மகன் பரமசிவம் (வயது 15). இவர் அங்குள்ள அரசு பள்ளிக்கூடத்தில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

கொடிக்குறிச்சியை அடுத்துள்ள சிவராமபேட்டை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள கோவிலில் திருவிழா நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் பரமசிவம் கோவிலுக்கு சென்றார்.

பின்னர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, ஊருக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். ஊர் அருகே சென்றபோது, அந்த வழியாக அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் அந்த வாகனம் பரமசிவம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேய பரிதாபமாக பலியானார்.

இதை பார்த்த அந்த பகுதி மக்கள் இதுகுறித்து இலத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பரமசிவம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, பரமசிவம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தென்காசி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பள்ளி மாணவன் பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com