மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவி சாவு காதலனிடம் போலீசார் விசாரணை

தேன்கனிக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவி பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக காதலனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவி சாவு காதலனிடம் போலீசார் விசாரணை
Published on

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை ஜெய்த் தெருவை சேர்ந்தவர் ராமன். இவருடைய மகன் மாதேஸ் (வயது 23). இவர் ஓசூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். பின்னர் இவர் கல்லூரியில் இருந்து பாதியிலேயே நின்று விட்டார். இதே கல்லூரியில் ஓசூர் கே.சி.சி. நகரை சேர்ந்த சீனிவாசன் மகள் நேத்ராவதி (20) பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர்கள் 2 பேரும் கல்லூரியில் படித்த போது பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.

இந்தநிலையில் நேற்று மாணவி நேத்ராவதி தனது காதலனுடன் கல்லூரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பெண்ணங்கூர் பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது திடீரென மாணவி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனே அக்கம் பக்கத்தினர் மாணவியை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவி நேத்ராவதி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் ஆஸ்பத்திரிக்கு வந்து மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இதுதொடர்பாக தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து காதலன் மாதேசிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காதலனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற கல்லூரி மாணவி தவறி கீழே விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com