நாடாளுமன்ற வரலாற்றில் 17-வது மக்களவை பொற்காலம் என கருதப்படும்: பிரதமர் மோடி


தினத்தந்தி 26 Jun 2024 3:25 PM IST (Updated: 26 Jun 2024 4:40 PM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற வரலாற்றில் ஓம்பிர்லா தலைமையின் கீழ் 17-வது மக்களவையில் எடுக்கப்பட்ட முடிவானது ஒரு பொற்காலம் என கருதப்படும் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையின் சபாநாயகர் பதவிக்கான தேர்தல் குரல் வாக்கெடுப்பு மூலம் இன்று நடைபெற்றது. இதில், பா.ஜ.க. வேட்பாளரான ஓம் பிர்லா 297 வாக்குகள் பெற்றார். காங்கிரஸ் வேட்பாளரான சுரேஷ் 232 வாக்குகள் பெற்றார். இதன் மூலம் மக்களவை சபாநாயகர் தேர்தலில் ஓம் பிர்லா வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதனால், ஓம் பிர்லா 2-வது முறையாக சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு பிரதமர் மோடி தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். இதனை தொடர்ந்து, மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தியும் தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். இதேபோன்று, நாடாளுமன்ற விவகார துறை மந்திரி கிரண் ரிஜிஜுவும் தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

இதன்பின்னர் அவையில் பிரதமர் மோடி பேசும்போது, மதிப்புக்குரிய சபாநாயகர் 2-வது முறையாக இந்த பதவியை ஏற்றிருப்பது அவைக்கு ஒரு நல்ல அதிர்ஷ்டம். இது ஒரு சாதனையும் ஆகும். 5 ஆண்டுகள் நிறைவுக்கு பின்னர் இதுபோன்று, 2-வது முறையாக சபாநாயகராகும் வாய்ப்பு பல்ராம் ஜாக்கருக்கு கிடைத்தது.

நீங்களும் இந்த வாய்ப்பை பெற்றிருக்கிறீர்கள். உங்களுக்கும் மற்றும் மொத்த அவைக்கும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். இந்த அவை சார்பாக உங்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்ளவும் விரும்புகிறேன். பேரமுத காலத்தில், 2-வது முறையாக இந்த பதவியை நீங்கள் வகிப்பது, உங்களுக்கான ஒரு பெரிய பொறுப்பாக இருக்கும்.

நாடாளுமன்ற வரலாற்றில் ஓம்பிர்லா தலைமையின் கீழ் 17-வது மக்களவையில் எடுக்கப்பட்ட முடிவானது ஒரு பொற்காலம் என கருதப்படும் என பேசியுள்ளார். இந்தியாவின் வருங்காலத்திற்கு வழிகாட்டுவதில் 17-வது மக்களவை ஒரு முக்கிய பங்காற்றியது என்றும் அவர் கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து பேசும்போது, உங்களுடைய அனுபவங்களை கொண்டு, அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீங்கள் எங்களை வழிநடத்தி செல்வீர்கள் என நாங்கள் நம்புகிறோம். எம்.பி.யாக நீங்கள் செயல்படும் விதம், கற்று கொள்வதற்கு உகந்தது. உங்களுடைய ஸ்டைல் எங்களுடைய இளம் எம்.பி.க்களுக்கு உத்வேகத்தை ஏற்படுத்தும் என்று பேசியுள்ளார்.


Next Story