'கணவர்களை வீட்டில் மது குடிக்க சொல்லுங்கள்' பெண்களுக்கு மத்திய பிரதேச மந்திரி அறிவுரை
மந்திரியின் இந்த அறிவுரை குடும்ப வன்முறை சம்பவங்களுக்கு வழிவகுக்கும் என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது.
போபால்,
மத்தியபிரதேசத்தில் முதல்-மந்திரி மோகன் யாதவ் தலைமையிலான மந்திரி சபையில் சமூக நீதித்துறை மந்திரியாக இருந்து வருபவர் நாராயண் சிங் குஷ்வாஹா.
இவர் தலைநகர் போபாலில் நடைபெற்ற போதை ஒழிப்பு பிரசார நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளாராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கணவர்களின் குடிப்பழக்கத்தை போக்க பெண்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இதுப்பற்றி அவர் பேசுகையில், "வெளியே மது குடிக்கக் கூடாது என்று உங்கள் கணவர்களிடம் சொல்லுங்கள். நீங்கள் குடிக்க விரும்பினால் வீட்டில் எங்கள் முன்னால் குடியுங்கள் என்று அவர்களிடம் சொல்லுங்கள். மனைவி, பிள்ளைகள் முன்னிலையில் மது குடிக்க வெட்கப்படுவார்கள். உங்கள் முன்னால் மது குடிக்கும்போது அவர்களின் வரம்பு குறைந்து கொண்டே போகும். படிப்படியாக குறைத்து குடிபழக்கத்தை கைவிடும் நிலைக்கு வந்து விடுவார்கள்" என்றார்.
இதனிடையே மந்திரியின் இந்த அறிவுரை குடும்ப வன்முறை சம்பவங்களுக்கு வழிவகுக்கும் என குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் கட்சி மந்திரி தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.