கேரள மந்திரி குவைத் செல்ல மத்திய அரசு அனுமதி மறுப்பு - காங்கிரஸ், பினராயி விஜயன் கண்டனம்


கேரள மந்திரி குவைத் செல்ல மத்திய அரசு அனுமதி மறுப்பு - காங்கிரஸ், பினராயி விஜயன் கண்டனம்
x
தினத்தந்தி 14 Jun 2024 4:53 PM IST (Updated: 14 Jun 2024 5:17 PM IST)
t-max-icont-min-icon

கேரள சுகாதாரத்துறை மந்திரி குவைத் செல்ல மத்திய அரசு அனுமதி அளிக்காதது குறித்து பினராயி விஜயன் விமர்சித்துள்ளார்.

திருவனந்தபுரம்,

குவைத்தில் உள்ள மங்காப் என்ற இடத்தில் சுமார் 195 புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 12-ந்தேதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 45 இந்தியர்கள் உயிரிழந்தனர். மேலும் பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், எகிப்து மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 4 தொழிலாளர்கள் உள்பட மொத்தம் 49 பேர் தீ விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் உடல்களை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்காக மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்தியர்களுக்கு உரிய சிகிச்சைகளை வழங்க குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த பணிகளை மேற்பார்வை செய்ய மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி கீர்த்தி வர்தன் சிங் குவைத் சென்றார்.

இதனிடையே குவைத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியான நிலையில், மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜை குவைத்திற்கு அனுப்ப கேரள அரசு முடிவு செய்தது. ஆனால் அவரை குவைத் அனுப்புவதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் இருந்து அனுமதி கிடைக்கவில்லை.

இந்த நிலையில், மத்திய அரசின் நிலைப்பாடு மிகவும் தவறானது என கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் விமர்சித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், "கேரள சுகாதாரத்துறை மந்திரி கொச்சி விமான நிலையத்திற்கு வந்தார். ஆனால் மத்திய அரசின் அனுமதி கிடைக்காததால் அவரால் பயணம் செய்ய முடியவில்லை. தற்சமயம் இதை பேசுபொருளாக்க நான் விரும்பவில்லை. இதைப்பற்றி பிறகு விவாதித்துக் கொள்ளலாம். ஆனால் இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு மிகவும் தவறானது" என்று தெரிவித்தார்.

அதே போல், கேரள மாநில காங்கிரஸ் தலைவர் வி.டி.சதீசன் கூறுகையில், "கேரள சுகாதாரத்துறை மந்திரியை குவைத் செல்ல மத்திய அரசு அனுமதிக்காதது மிகவும் துரதிருஷ்டவசமானது. மாநில அரசின் பிரதிநிதியாக மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் அவர் உதவியிருப்பார். இந்த விவகாரத்தில் மத்திய அரசு தவறான முன்னுதாரணத்தை வழங்கியிருக்கிறது" என்று கூறினார்.

அதே சமயம் கேரள மாநில கவர்னர் ஆரிப் முகமது கான் மற்றும் மத்திய இணை மந்திரி சுரேஷ் கோபி ஆகியோர் மத்திய அரசின் முடிவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். குவைத்தில் ஏற்கனவே மத்திய அரசின் பிரதிநிதிகள் மற்றும் தூதரக அதிகாரிகள் அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story