இந்தியா-இங்கிலாந்து இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தில் விரைவான முடிவு; அறிக்கை வெளியீடு
இங்கிலாந்தின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் முன்னேற்றம் ஆகியவற்றிற்காக நேர்மறையாக பங்காற்றி வரும் இந்திய சமூகத்திற்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டு உள்ளன.
புதுடெல்லி,
இங்கிலாந்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிலாளர் கட்சியை சேர்ந்த பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கு, பிரதமர் மோடி இன்று தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.
இதுபற்றி வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில், இந்தியா மற்றும் இங்கிலாந்து என இரு நாடுகளும் பரஸ்பரம் பலன்பெற கூடிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (எப்.டி.ஏ.) ஒன்றில் விரைவாக முடிவை எட்டுவதற்கான பணியை மேற்கொள்வோம் என இரு நாட்டு தலைவர்களும் ஒப்பு கொண்டிருக்கிறோம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இங்கிலாந்தின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் முன்னேற்றம் ஆகியவற்றிற்காக நேர்மறையாக பங்காற்றி வரும் இந்திய சமூகத்திற்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம் என அதுபற்றிய அறிக்கை தெரிவிக்கின்றது. இதேபோன்று, இந்தியாவுக்கு விரைவில் வரும்படி ஸ்டார்மருக்கு பிரதமர் மோடி அழைப்பும் விடுத்துள்ளார்.
இதேபோன்று பிரதமர் மோடி வெளியிட்டு உள்ள எக்ஸ் சமூக ஊடக பதிவில், கெய்ர் ஸ்டார்மரிடம் பேசியதில் மகிழ்ச்சி. இங்கிலாந்தின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட கெய்ர் ஸ்டார்மருக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொண்டேன்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு நாடுகளை சேர்ந்த நம்முடைய மக்களின் முன்னேற்றம் மற்றும் வளம் ஆகியவற்றிற்காகவும் மற்றும் உலகளாவிய நன்மைக்காகவும், விரிவான மூலோபாய நட்புறவை ஆழப்படுத்தவும் மற்றும் இந்தியா மற்றும் இங்கிலாந்தின் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தவும் நாங்கள் தொடர்ந்து ஈடுபாட்டுடன் செயல்படுவோம் என அவர் பதிவிட்டு உள்ளார்.