நடிகை குட்டி ராதிகாவிடம் லோக் அயுக்தா போலீஸ் விசாரணை

குட்டி ராதிகா, தமிழில் வெளியான இயற்கை படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் வீட்டுவசதித்துறை மந்திரியாக இருந்து வருபவர் ஜமீர் அகமதுகான். இவருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் கடந்த 2019-ம் ஆண்டு அமலாக்கத்துறை அதிகாரிகள்சோதனை நடத்தினர். அப்போது அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தது தெரியவந்தது.
இதுபற்றி அப்போது கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்ததுடன், ஜமீர் அகமதுகானும் மந்திரியாக இருந்தார். அந்த சந்தர்ப்பத்தில் மாநிலத்தில் அமலில் இருந்த ஊழல் தடுப்பு படைக்கு, அமலாக்கத்துறையினர் ஜமீர் அகமதுகான் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பது பற்றிய தகவல்களை அளித்தனர்.
அதன்பேரில், மந்திரி ஜமீர் அகமதுகான் மீது ஊழல் தடுப்பு படையில் வழக்குப்பதிவாகி இருந்தது. பின்னர் ஊழல் தடுப்பு படை ரத்து செய்யப்பட்டு, லோக் அயுக்தாவுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டது. மந்திரி ஜமீர் அகமதுகான் மீது பதிவான சொத்து குவிப்பு வழக்கும் லோக் அயுக்தாவுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
லோக் அயுக்தா போலீஸ் விசாரணையின் போது தான் யாரிடம் எல்லாம் கடன் வாங்கி இருந்தேன் என்பது தொடர்பான பட்டியலை மந்திரி ஜமீர் அகமதுகான் கொடுத்திருந்தார். அந்த பட்டியலில் நடிகை குட்டி ராதிகாவின் பெயரும் இடம் பெற்றிருந்தது. அவரிடம் இருந்து ரூ.2½ கோடி கடன் வாங்கி இருப்பதாக ஜமீர் அகமதுகானும் கூறியிருந்தார்.
இதையடுத்து, குட்டி ராதிகா விசாரணைக்கு ஆஜராகும்படி கோரி லோக் அயுக்தா போலீசார் நோட்டீஸ் அனுப்பி வைத்திருந்தனர். அதன்படி, அவரும் போலீசார் முன்பு விசாரணைக்கு ஆஜராகி இருந்தார். அப்போது மந்திரி ஜமீர் அகமதுகானுக்கு ரூ.2½ கோடி கடன் கொடுத்ததை குட்டி ராதிகா ஒப்புக்கொண்டது தெரியவந்தது.
மேலும் கடந்த 2012-ம் ஆண்டு சமீகா எண்டர்பிரைசஸ் நிறுவனம் மூலமாக நடிகர் யஷ், நடிகை ரம்யாவை வைத்து லக்கி சினிமா தயாரித்ததாகவும், அந்த படத்தின் மூலம் கிடைத்த லாபத்தை மந்திரி ஜமீர் அகமதுகானிடம் கடனாக கொடுத்ததாகவும் குட்டி ராதிகா போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
இந்த கடன் விவகாரம் தொடர்பான விசாரணையை குட்டி ராதிகாவிடம் நடத்தி முடித்திருப்பதாகவும், தேவைப்பட்டால் மீண்டும் அவரிடம் விசாரிக்கப்படும் என்றும் லோக் அயுக்தா போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். லோக் அயுக்தா விசாரணைக்கு உள்ளாகி உள்ள குட்டி ராதிகா, தமிழில் வெளியான இயற்கை படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர். அவர் கன்னட சினிமாக்களில் நடித்து வருவதுடன், படங்களையும் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.






